எரிபொருள் தீர்ந்தது: காசாவில் மின்சார ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தம்; மக்கள் அவதி


எரிபொருள் தீர்ந்தது:  காசாவில் மின்சார ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தம்; மக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Oct 2023 8:20 PM IST (Updated: 11 Oct 2023 10:15 PM IST)
t-max-icont-min-icon

காசாவில் எரிபொருள் தீர்ந்த நிலையில், மின்சார ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் படைகளும் பதிலடியாக தாக்குதலை நடத்தி வருகிறது. காசா மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. இதில், பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்து வருகின்றன.

ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது என கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவை தெரிவித்து உள்ளன.

இந்நிலையில், காசா முனை பகுதியில் செயல்பட்டு வந்த மின்சார ஆலையில் எரிபொருள் தீர்ந்து விட்டது. இதனால், அதன் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என காசாவின் ஆற்றல் கழகம் அறிவித்து உள்ளது என்று தி ஜெருசலேம் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தி தெரிவிக்கின்றது.

காசாவில் இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள், மருந்துகள் இல்லாத சூழலில், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தவித்து வருகின்றனர்.

காசாவில் 10 மணி நேரம் மட்டுமே மின் வினியோகம் நீடிக்கும் என்ற சூழல் உள்ளது. இதனால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. காசாவில் லட்சக்கணக்கான மக்கள் குடிநீர், உணவு இன்றி தவித்து வருகின்றனர். காசாவில், மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், காசாவில் எரிபொருள் தீர்ந்த நிலையில், மின்சார ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு இருப்பது மக்களை இன்னும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.

காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியின்படி, இஸ்ரேலின் கடுமையான பதிலடியால், ஆயிரம் பேர் உயிரிழந்தும், 5 ஆயிரம் பேர் காயமடைந்தும் உள்ளனர் என சி.என்.என். தெரிவிக்கின்றது.


Next Story