இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்? போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் இடையே போட்டி
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமாவால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகிய இருவர் இடையே போட்டி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் ராஜினாமா
பாராளுமன்ற ஜனநாயகத்தின் தாய் என்ற சிறப்புக்குரிய இங்கிலாந்தில் பிரதமர் பதவி நிலையற்றதாகி இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் அந்த நாடு தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் என 3 பிரதமர்களை கண்டுவிட்டது.
அந்த நாட்டின் பொருளாதார பிரச்சினைகளால், சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில் எழுந்த எதிர்ப்பு, அழுத்தம் காரணமாக பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகுவதாக நேற்று முன்தினம் திடீரென அறிவித்தார். இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் மிகக்குறைந்த காலம் (45 நாட்கள்) பிரதமர் பதவி வகித்தவர் அவர்தான்.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை (பிரதமரை) தேர்வு செய்யும் நடைமுறைகளை அடுத்து வாரத்திற்குள் முடிக்க வேண்டும். அதுவரையில் நான் பிரதமர் பதவியில் தொடருவேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
யார் புதிய பிரதமர்?
இதையடுத்து அந்த நாட்டின் புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய தலைவர் தேர்வு நடைமுறைகள், அதிவேகமாக நடைபெற உள்ளது.
அந்த வகையில் குறைந்தது 100 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளவர்தான் போட்டி போட முடியும். கன்சர்வேடிவ் கட்சிக்கு 300-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ள நிலையில் 3 பேர் களம் இறங்க முடியும்.
இதற்கான கால அவகாசம் வரும் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை உள்ளது.
போரிஸ் ஜான்சன்-ரிஷி சுனக்
இதுவரை பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன் என எந்த தலைவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருவதாக லண்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதிய நிலவரப்படி இந்திய வம்சாவளி ரிஷி சுனக் 45 எம்.பி.க்கள் ஆதரவையும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் 24 எம்.பி.க்கள் ஆதரவையும், பெண் தலைவரான பென்னி மார்டண்ட் 17 எம்.பி.க்கள் ஆதரவையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சமீபத்தில் பதவி விலகிய இந்திய வம்சாவளி உள்துறை மந்திரி சூவெல்லா பிரேவர்மன், சர்வதேச வர்த்தகக மந்திரி கெமி படேனோச், ராணுவ மந்திரி பென் வாலஸ் பெயர்களும் அடிபட்டு வந்தன. ஆனால் பென் வாலஸ் தான் போட்டியில் இல்லை என்று அறிவித்துள்ளார். அவர் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இத்தனை பேர் பெயர்கள் அடிபட்டாலும், இறுதிப்போட்டி இந்திய வம்சாவளி ரிஷி சுனக்குக்கும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் இடையே நிலவும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தேர்வு இப்படித்தான்....
பிரதமர் பதவிக்கு 3 பேர் போட்டியில் இறங்கினால், கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் முதலில் ஓட்டு போடுவார்கள். 3 பேரில் குறைவான ஓட்டு பெற்ற ஒருவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்.
2 வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள். 2 பேரில் தங்களது முன்னுரிமை யார் என்று கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் அடையாளம் காட்டுவார்கள். அதன்பின்னர் அவர்கள் ஆன்லைன் வழியாக ஓட்டு போடுவார்கள்.
இதில் வெற்றி பெறுகிறவர், கன்சர்வேடிவ் கட்சித்தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு பெறுவார்.
புதிய பிரதமர் யார் என்பது 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படும்.
இதற்கிடையே எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் சர் கெயிர் ஸ்டார்மர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் திடீர் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.