இதை செய்தால் உடனே போர் நிறுத்தம்: உக்ரைனுக்கு புதின் விதித்த முக்கிய நிபந்தனைகள்
இத்தாலியில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு மற்றும் சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில் புதின் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ:
பாதுகாப்பிற்காக நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முயன்றதால், அந்த நாட்டின் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டை யாராவது தாக்கினால், மற்றவர்கள் ராணுவ உதவி செய்ய வேண்டும் என்பது நேட்டோ நாடுகளின் உடன்படிக்கை. எனவே, நேட்டோவில் சேர விடாமல் உக்ரைனை பணிய வைக்கும் முயற்சியாக ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் ரஷிய படைகளுக்கு உக்ரைன் பதிலடி கொடுப்பதால் போர் தொடர்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்கும்படி கேட்டுக்கொண்டன. எனினும், அதற்கான முயற்சிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.
இந்நிலையில், ரஷியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய புதின், உக்ரைனில் போர் நிறுத்தம் செய்வதற்கு 2 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெறத் தொடங்கவேண்டும், நேட்டோவில் சேருவதற்கான திட்டங்களை கைவிடவேண்டும் என்பதே அந்த நிபந்தனைகள். இந்த நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டால் உடனே போரை நிறுத்த உத்தரவிடுவதுடன், பேச்சுவார்த்தையையும் தொடங்க உள்ளதாக புதின் வாக்குறுதி அளித்துள்ளார்.
இத்தாலியில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு மற்றும் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்தில் உலக தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், புதின் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் புதின் பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.