பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
பிரான்ஸ் அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாரிஸ்,
கடந்த ஜனவரி 10-ந்தேதி பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே, பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி 2030-ம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 64-ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு பணி செய்பவர்களால் மட்டுமே குறைந்தபட்ச ஓய்வூதியத்தை பெற இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2027-ம் ஆண்டு முதல் 43 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே முழு ஓய்வூதியத்தை பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அரசு வெளியிட்ட இந்த ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்நாட்டின் பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்சின் பொது தொழிலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தின்படி, ஜனவரி 19-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் 4 லட்சம் பேரும், இரண்டாம் கட்ட போராட்டத்தில் 5 லட்சம் பேரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாட்டில் 3-ல் ஒரு பங்கு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக பிரான்சின் தேசிய ரெயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறைவான ரெயில்கள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதே சமயம் வரும் 11-ந்தேதி நடைபெறும் போராட்டத்தில் மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொள்ளுமாறு பிரான்ஸ் பொது தொழிலாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.