எடிட் செய்யப்பட்ட குடும்ப புகைப்படத்தால் சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி கேத்தரின்


எடிட் செய்யப்பட்ட குடும்ப புகைப்படத்தால் சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி கேத்தரின்
x

இளவரசி கேத்தரின் வெளியிட்ட புகைப்படம் பரவலான யூகங்களையும், அரச குடும்பம் மீதான பொது நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பியது.

லண்டன்:

வேல்ஸ் இளவரசி கேத்தரின், கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டபிறகு பொதுவெளியில் அவரது புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகான தனது முதல் அதிகாரப்பூர்வ படத்தை பிரிட்டனின் அன்னையர் தினத்தன்று (மார்ச் 10) வெளியிட்டார்.

வேல்ஸ் இளவரசரால் எடுக்கப்பட்ட அந்த படத்தில் கேத்தரின் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் இடம்பெற்றிருந்தனர். இளவரசியின் உடல்நிலை குறித்த யூகங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், இந்த புகைப்படம் வெளியானது. எனவே, இந்த புகைப்படம் யூகங்களுக்கு விடை அளிப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, அப்படம் டிஜிட்டல் முறையில் 'எடிட்' செய்யப்பட்டிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்களில் பரவலான யூகங்களையும், அரச குடும்பம் மீதான பொது நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பியது. இதனால், செய்தி நிறுவனங்கள் அந்த புகைப்படத்தை நீக்கின.

இந்த விவகாரம் தனது கவனத்திற்கு வந்த நிலையில், எடிட் செய்யப்பட்ட புகைப்படம் வெளியிட்டது தொடர்பாக இளவரசி கேத்தரின் மன்னிப்பு கேட்டுள்ளார்.

"அமெச்சூர் புகைப்படக் கலைஞர்களைப் போன்று, நானும் சில சமயங்களில் படங்களை எடிட்டிங் செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன். நாங்கள் பகிர்ந்த குடும்ப புகைப்படம் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என கேத்தரின் சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தில் கேத்தரின் சிறிய மாற்றங்களை செய்ததாக அரச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இளவரசி கேத்தரின் வருத்தம் தெரிவித்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தபோதும், எடிட் செய்யப்படாத ஒரிஜினல் புகைப்படத்தை வெளியிடவேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர். ஆனால், ஒரிஜினல் புகைப்படத்தை மீண்டும் வெளியிடப்போவதில்லை என்று கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.


Next Story