ரஷிய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் புதின் உத்தரவு
உக்ரைனுக்கு எதிரான போருக்கு இடையே ரஷிய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.
மாஸ்கோ,
உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, 6 மாதங்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய இந்த போரால், உக்ரைனில் உள்ள பொதுமக்கள், வீரர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கல்வி நிலையங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் உருக்குலைந்து போயுள்ளன. போரானது நீண்டு கொண்டே செல்கிறது. தொடக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது.
உக்ரைன் போரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுமிகள், பெண்களுக்கு ரஷிய வீரர்களால் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன என அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த போரால், பெரியவர்களை விட சிறுவர், சிறுமிகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு (யுனிசெப்) வேதனை தெரிவித்து உள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போருக்கு இடையே, ரஷிய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார். இதனால், படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 11.5 லட்சம் என்ற அளவில் உயரும்.
ரஷிய படையில் எண்ணிக்கையை அதிகரிக்கும் புதினின் உத்தரவு ஜனவரி 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். எனினும், அதிகாரிகள் மட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆள்சேர்ப்பு அல்லது சுயவிருப்பத்தின் பேரில் படையில் சேரும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அல்லது இவை இரண்டும் சேர்ந்து காணப்படுவது என்பதில் எந்த வகையில் ஆள்சேர்ப்பு இருக்கும் என குறிப்பிடப்படவில்லை.
இந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் மொத்த ரஷிய படையின் எண்ணிக்கை 20.39 லட்சம் ஆக உயரும். அவர்களில் 11.50 லட்சம் பேர் ஆயுத படை வீரர்களாக இருப்பார்கள்.
இதுபற்றி அரசு வெளியிட்ட செய்தியில், சுயவிருப்பம் கொண்ட ஒப்பந்த அடிப்படையிலான வீரர்களே இதில் இடம் பெறுவார்கள் என்றும் இதனை உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றும் தெரிவித்து உள்ளது.
இதுதவிர, சில கைதிகளை கூட ராணுவ பணியின் ஒரு பகுதியாக படையில் சேர வரும்படி அழைப்பு விடப்பட்டு உள்ளது என ரஷிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.