ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமோர்-லெஸ்தேவின் உயரிய விருது வழங்கி கவுரவம்


ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமோர்-லெஸ்தேவின் உயரிய விருது வழங்கி கவுரவம்
x

குடும்பம், சமூகம், தேசம் அல்லது உலகத்தின் முன்னேற்றத்திற்கு பெண்களின் முன்னேற்றம் முக்கியம் என ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியுள்ளார்.

திலி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, திமோர்-லெஸ்தே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் அந்நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ்-ஹோர்தவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது முர்முவுக்கு ஜோஸ், நாட்டின் உயரிய கிராண்ட்-காலர் ஆப் தி ஆர்டர் ஆப் திமோர்-லெஸ்தே விருது வழங்கி கவுரவித்து உள்ளார்.

இந்த சந்திப்பின்போது, ஜோசிடம் முர்மு பேசும்போது, உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என இந்தியா கருதுகிறது. கடின உழைப்பு மற்றும் நம்பிக்கை தன்மை ஆகியவற்றிற்காக இந்தியர்களை ஒட்டுமொத்த உலகமும் ஏற்று கொண்டுள்ளது என முர்மு கூறியுள்ளார்.

இந்திய வம்சாவளியினர் ஒவ்வொரு துறையிலும் பங்கு பெறுகின்றனர். முன்னோர்களிடம் இருந்து கற்று கொள்ளுதலால், இந்தியர்கள் எல்லா இடத்திலும் ஏற்று கொள்ளப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூகம் மற்றும் உலகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு பெண்களின் முன்னேற்றம் முக்கியம் என வலியுறுத்திய முர்மு, பெண்கள் சுதந்திரத்துடன் செயல்பட சுயஉதவி குழுக்கள் எப்படி செயல்படுகின்றன? என்றும் அவர் சுட்டி காட்டி பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், உலகில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். குடும்பம், சமூகம், தேசம் அல்லது உலகத்தின் முன்னேற்றத்திற்கு பெண்களின் முன்னேற்றம் முக்கியம்.

ஒரு காலத்தில் பெண்கள் வீட்டிலேயே இருந்தனர். ஆனால், இப்போது ஒவ்வொருவருக்கும் புரிதல் உள்ளது. அவர்கள் முன்னேற்றி செல்ல விரும்புகின்றனர். குடும்பம், சமூகம் மற்றும் நாட்டை முன்னெடுத்து செல்ல அவர்கள் விரும்புகின்றனர் என முர்மு கூறியுள்ளார்.


Next Story