இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு


இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு
x

இலங்கையில் மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொழும்பு

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன் உதவி அளித்துள்ளன.

இதற்கிடையே இலங்கையில் வரும் மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தலுக்கு போதுமான நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது. வாக்கு சீட்டு அச்சடிக்கவும், எரிபொருள் மற்றும் போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல்வேறு காரணங்களால் மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கடினம் என்று இந்த மாத தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

இந்நிலையில், தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் தேதி குறித்த அறிவிப்பாணை வரும் மார்ச் 3ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story