வருமான வரி மோசடி வழக்கில் பாப் பாடகி ஷகிரா மீது விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி!


வருமான வரி மோசடி வழக்கில் பாப் பாடகி ஷகிரா மீது விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி!
x

2012 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையே, பாடகி ஷகிராவால் ஈட்டப்பட்ட வருமானத்திற்கான வரியை அவர் செலுத்தத் தவறியதாக தெரிவிக்கப்பட்டது.

மாட்ரிட்,

கொலம்பிய நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகிரா மீதான வரி மோசடி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஸ்பெயின் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும், முன்கூட்டிய வெளியிடப்பட்ட கோர்ட்டின் முடிவை மீண்டும் உறுதி செய்தது.

வரி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள போதுமான ஆதாரங்கள் இருப்பதால், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக ஸ்பெயின் கோர்ட்டு தெரிவித்தது. ஜூலை 2021 இல் வழங்கப்பட்ட முந்தைய கோர்ட்டு தீர்ப்பின்படியே இந்த முடிவை கோர்ட்டு எடுத்துள்ளது.

45 வயதான பாடகி ஷகிரா, பார்சிலோனா எப்.சி கால்பந்து கிளப் அணியின் வீரரான ஜெரார்ட் பிக் உடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 2011 முதல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இடையே, பாடகி ஷகிராவால் ஈட்டப்பட்ட வருமானத்திற்கான வரியை அவர் செலுத்தத் தவறியதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

அதன்படி, அவர் வருமான வரியாக செலுத்த வேண்டிய தொகை 14.5 மில்லியன் யூரோக்கள் (15.54 மில்லியன் டாலர்கள்) என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அந்த 2 ஆண்டுகளில், வடக்கு ஸ்பெயினின்பகுதியான கேட்டலோனியாவில் ஷகிரா வசித்து வந்ததாகவும் அவர்கள் வாதிட்டனர்.

மறுபுறம், ஷகிராவின் தரப்பில், அவர் 2015 இல் மட்டுமே ஸ்பெயினுக்குச் சென்றதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர், அவர் தனது அனைத்து வரியையும் செலுத்தியுள்ளார் எனவும், தன் கடமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, உறுதியான சட்ட வாதங்களுடன் இந்த வழக்கை வாதிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


Next Story