காவல்துறை தலைமையகத்தை குறிவைத்த பயங்கரவாதிகள்.. பாகிஸ்தானில் 3 போலீஸ்காரர்கள் பலி
தாக்குதலைத் தொடர்ந்து போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
பெஷாவர்:
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரையும் ராணுவ கட்டமைப்புகளையும் குறிவைத்து பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சி குழுவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் டேங்க் மாவட்டத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸ்காரர்கள் பலியாகினர். பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும், எனினும் பெரிய அளவிலான தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு அன்சருல் ஜிகாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, தேரா இஸ்மாயில் கான் நகரில் புதிய பயங்கரவாத அமைப்பான டிஜேபி நடத்திய தாக்குதலில் 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.