மெக்சிகோவில் மக்களை பயமுறுத்திய 'பேய்' பொம்மையை கைது செய்த போலீசார்!
பேய் பொம்மையை போலீசார் கைவிலங்கிட்டு தூக்கிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.
மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோவின் கோஹுயிலா மாகாணத்தில் உள்ள மான்க்லோவா நகரத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்லோஸ் என்ற நபர் பொம்மை ஒன்றின் கையில் கத்தியை வைத்து சாலையில் சென்ற மக்கள் மீது அதனை தூக்கி வீசி பயமுறுத்தியுள்ளார். மேலும் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கார்லோஸை கைது செய்தனர். அதோடு மக்களை பயமுறுத்துவதற்காக அவர் பயன்படுத்திய 'சக்கி' (Chucky) என்ற பேய் பொம்மையையும் போலீசார் கைவிலங்கிட்டு கைது செய்து தூக்கிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
கைது செய்யப்பட்ட அந்த பொம்மை 'சைல்ட்ஸ் ப்ளே', 'கர்ஸ் ஆஃப் சக்கி' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் இடம்பெற்ற 'சக்கி டால்' எனப்படும் பொம்மை ஆகும். அந்த படங்களில் மனிதர்களை கொலை செய்யும் பேய் பொம்மையாக இந்த 'சக்கி டால்' காட்டப்பட்டிருக்கும். அதே பாணியில் தான் கார்லோஸ் பொதுமக்களை பயமுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.