ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து தலைவர்களுடன் விவாதித்தார் பிரதமர் மோடி
ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதித்தார்
வாஷிங்டன்,
பிரதமர் மோடி அமெரிக்க நாட்டுக்கு கடந்த 21-ந் தேதி முதல் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது அவர் வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2-வது முறையாக பேசி புதிய வரலாறு படைத்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசின் சார்பில் அவருக்கு பிரமாண்ட சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
அமெரிக்க முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசி, இந்தியாவில் முதலீடுகள் செய்ய அழைப்பு விடுத்தார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியிலும் அவர் உரையாற்றினார்.
அதையடுத்து பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தை நேற்று முன்தினம் மாலை முடித்துக்கொண்டு டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், "அமெரிக்காவுக்கான சிறப்பு பயணம் முடிவுக்கு வந்தது. இந்த பயணத்தின்போது, இந்திய அமெரிக்க இரு தரப்பு உறவுக்கு வலு சேர்க்கும் நோக்கத்தில் நான் பல்வேறு நிகழ்ச்சிகளில், கலந்துரையாடல்களில் கலந்துகொண்டேன். நமது பூமியை இனி வரும் தலைமுறைக்கான சிறப்பான இடமாக மாற்றுவதற்கு நம் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றும்" என கூறி உள்ளார்.
எகிப்துக்கு பயணம்
அதைத் தொடர்ந்து அவர் வாஷிங்டனில் இருந்து எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச்சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல்சிசி அழைப்பின் பேரில் அரசுமுறை பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு
எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை அந்த நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி, ஒரு சிறப்பு நிகழ்வாக விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
டுவிட்டர் பதிவு
பிரதமர் மோடி கெய்ரோவில் தரையிறங்கியதும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், "கெய்ரோவில் தரையிறங்கினேன். எனது இந்த பயணம், எகிப்துடனான இந்தியாவின் உறவை பலப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். அதிபர் அப்தெல் பட்டா எல்சிசியைச் சந்தித்து பேச்சு நடத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என கூறி உள்ளார்.
இன்று அதிபருடன் சந்திப்பு
இன்று (ஞாயிற்றுக்கிழமை) எகிப்து அதிபர் எல்சிசியுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அந்த நாட்டின் பிரதமர் முஸ்தபாவுடன் வட்ட மேஜை சந்திப்பு முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்தின் தலைமை முப்தி டாக்டர் ஷாவ்கி இப்ராகிம் அப்தெல் கரீம் அல்லாமையும் அவர் சந்தித்து பேசுகிறார். எகிப்து அறிஞர்களுடன் விவாதிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
11-ம் நூற்றாண்டின் மசூதிக்கு போகிறார்
பிரதமர் மோடி அங்கு 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல் ஹக்கீம் மசூதிக்கு செல்கிறார்.
மேலும், முதல் உலக போரின்போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்துகிறார்.
பிரதமர் மோடியின் எகிப்து பயணம், அந்த நாட்டுடனான இரு தரப்பு உறவில் ஒரு புதிய மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதித்தார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஹசன் ஆலம் ஹோல்டிங் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹசன் ஆலம் ஆகியோர் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்குதல் தொடர்பான விஷயங்களை விவாதித்தனர்.
எகிப்தில் இருந்து புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பெட்ரோலியம் மூலோபாய நிபுணர், ஹெக்கி டாரிக்கை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அவருடன் உலகளாவிய விவகாரங்கள் தொடர்பான பரந்த அளவிலான விஷயங்கள் தொடர்பான உரையாடலை மேற்கொண்டார்.
தொடர்ந்து எகிப்தின் பிரபல யோகா பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுனர்கள், ரீம் ஜபக் மற்றும் நாடா அடெல் ஆகியோர் கெய்ரோவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். யோகாவை பிரபலப்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.