லைசென்ஸ் இல்லாமல் விமானத்தை திருடி வால்மார்ட் மீது மோதப்போவதாக மிரட்டிய நபர் தரையிறக்க தெரியாமல் அவதி; விசாரணையில் பகீர் தகவல்!


லைசென்ஸ் இல்லாமல் விமானத்தை திருடி வால்மார்ட் மீது மோதப்போவதாக மிரட்டிய நபர் தரையிறக்க தெரியாமல் அவதி; விசாரணையில் பகீர் தகவல்!
x

வால்மார்ட் கடையின் மீது விமானத்தை மோத விடுவதாக மிரட்டிய விமானி மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மிசிசிப்பி,

அமெரிக்காவில் வால்மார்ட் கடையின் மீது விமானத்தை மோத விடுவதாக மிரட்டிய விமானி மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி ஒருவர் விடுத்த மிரட்டல் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோரி பேட்டர்சன் என்ற நபர் டுபெலோ பகுதி விமான நிறுவனத்தில் பத்து வருடங்களாக ஊழியராக இருந்து வந்தார். அங்குள்ள விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியை செய்து வந்தார்.

இந்த நிலையில், கோரி பேட்டர்சன் டுபெலோ விமான நிலையத்தில் இருந்து கிங் ஏர் இரட்டை எஞ்சின் ஜெட் விமானத்தைத் திருடி நகரத்தின் மீது சில மணி நேரம் பறந்தார். சனிக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து முழுவதுமாக எரிபொருளை நிரப்பிய பிறகு அவர் 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை திருடினார்.

அதன்பின்னர் அந்த நபர் வால்மார்ட் மீது விமானத்தை மோத விடுவதாக மிரட்டல் விடுத்தார். உடனே டுபெலோவில் உள்ள வால்மார்ட்டில் இருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுமார் 3 மணி நேரம் 29-வயதான விமானி சுற்றி வந்தார். நிலைமை சீராகும் வரை வால்மார்ட் அங்காடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.

இறுதியில் விமானத்தில் வானில் வட்டமடித்து கொண்டிருந்த அவரிடம் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் அவர் அந்த ஜெட் விமானத்தை தரையிறக்க சம்மதித்தார். ஆனால் அவருக்கு விமானத்தை தரையிறக்கும் அனுபவம் இல்லை. அவரிடம் முறையான விமானி லைசென்ஸ் இல்லை.

இறுதியில் ஒரு தனியார் விமானியின் உதவியை பெற்று அவர் அந்த விமானத்தை வயலில் இறக்கினார். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார் மற்றும் அவர் மீது விமான திருட்டு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.


Next Story