பிலிப்பைன்ஸ்: மின்சேவை துண்டிப்பால் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதி


பிலிப்பைன்ஸ்: மின்சேவை துண்டிப்பால் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதி
x

பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீர் மின்சேவை துண்டிப்பால் மணிலா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.



மணிலா,


தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் நினோய் அகினோ என்ற விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்தே நாட்டின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வேண்டும். அதனால், இந்த விமான நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

அந்நாட்டில், கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட கொண்டாட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த தினங்களில் விடுமுறையை கொண்டாடுவதற்காக பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சொந்த நாட்டுக்கு மக்கள் திரும்புவார்கள். பிலிப்பைன்சுக்கு வெளிநாட்டு சுற்றுலாவாசிகளும் குவிவது வழக்கம்.

இந்த சூழலில், மணிலா விமான நிலையத்தில் திடீரென மின்சேவை துண்டிக்கப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கில் பயணிகள் மணிலா விமான நிலையத்தில் சிக்கி தவித்தனர். இதுபற்றிய புகைப்படங்களும், வீடியோக்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளன.

இந்த மின்சேவை துண்டிப்பால், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பகுதிக்கு தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, ஏறக்குறைய 300 விமானங்களின் சேவை பாதிப்படைந்தது. அவை காலதாமதமுடனோ, ரத்து செய்யப்பட்டோ அல்லது வேறு இடங்களுக்கு திருப்பியோ விடப்பட்டன.

இதனால், புது வருட கொண்டாட்ட கனவில் இருந்த 56 ஆயிரம் பயணிகள் வரை பாதிக்கப்பட்டனர். மின் வினியோகத்திற்கான இருப்பு இருந்த போதிலும், அதுவும் போதிய மின்சாரம் வழங்க முடியாமல் போயுள்ளது. இதற்காக பிலிப்பைன்சின் போக்குவரத்து செயலாளர் ஜெய்ம் பாடிஸ்டா விமான பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார்.


Next Story