பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியது
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியதால் பொதுமக்கள் கராச்சி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசாங்கம் கடன் கேட்டுள்ளது. ஆனால் அதற்கு மானியங்களை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்து இருக்கிறது. அதன்படி அங்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் அவற்றின் விலை தாறுமாறாக எகிறி உள்ளது.
இந்தநிலையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.91 அதிகரித்து ரூ.305.36 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் டீசல் ரூ.18.44 உயர்த்தப்பட்டு ரூ.311.84 ஆக உயர்ந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் பொதுமக்கள் வர்த்தக தலைநகரான கராச்சி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.