விமானத்தில் மூர்க்கத்தனமுடன் பயணிகள் நடந்து கொள்வது 2022-ம் ஆண்டில் அதிகரிப்பு; ஆய்வில் தகவல்
உலக அளவில் விமானத்தில் மூர்க்கத்தனமுடன் பயணிகள் நடந்து கொள்வது 2022-ம் ஆண்டில் அதிகரித்து காணப்படுகிறது என சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு ஆய்வு தெரிவிக்கின்றது.
இஸ்தான்புல்,
விமானங்களில் பயணம் செய்யும்போது, சக பயணிகள், விமான ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் தகாத முறையில் பேசுவது, நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது. சிகரெட் புகைப்பது, மதுபானம் குடிப்பது போன்ற விமான பயண விதிமீறல்கள் நடக்கின்றன.
சமீப காலங்களில், சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, கழிவறையில் சிகரெட் பிடிப்பது, மதுபானம் குடிப்பது, ஊழியர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் சர்வதேச அளவில் நடந்துள்ளன.
உலக அளவில் விமான பயணங்களில், பயணிகளின் நடவடிக்கைகளை பற்றி சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு புதிய ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, விமான பயணத்தின்போது, மூர்க்கத்தனமுடன் பயணிகள் நடந்து கொள்வது முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 2022-ம் ஆண்டில் அதிகரித்து உள்ளது என தெரிவிக்கின்றது.
இந்த ஆய்வின்படி, 2022-ம் ஆண்டில் ஒவ்வொரு 568 விமானங்களுக்கு ஒரு சம்பவம் என்ற கணக்கில் மூர்க்கத்தனமுடன் பயணிகள் நடந்து கொள்வது பதிவாகி உள்ளது. இது, 2021-ம் ஆண்டில் ஒவ்வொரு 835 விமானங்களுக்கு ஒரு சம்பவம் என்ற அளவில் இருந்தது.
இதனால், கடந்த ஆண்டில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த தருணங்களில், விமான விதிகளுக்கு கட்டுப்படாமல் நடந்து கொள்வது, தகாத முறையில் பேசுவது மற்றும் போதையில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
விமானத்தில் அமர்ந்து கொண்டு, சிகரெட் புகைப்பது, மதுபானம் குடிப்பது, சக பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் கோபம் கொள்வது, தவறாக பேசுவது போன்ற விமான பயண விதிமீறல்களும் நடக்கின்றன.
உடல்ரீதியிலான துன்புறுத்தல் நடந்தது மிக அரிது. எனினும், 2021-ம் ஆண்டில், எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் அது அதிகரித்து இருந்தது. ஒவ்வொரு 17,200 விமானங்களுக்கு ஒரு சம்பவம் என்ற அளவில் அந்த ஆண்டில் காணப்பட்டது. இது 61 சதவீதம் அதிகம் ஆகும் என ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்த அமைப்பின் துணை இயக்குநர் ஜெனரல் கன்ராட் கிளிப்போர்டு கூறும்போது, விமானத்தில் மூர்க்கத்தனமுடன் பயணிகள் நடந்து கொள்வது அதிகரித்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்கிறது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் சுதந்திர அனுபவம் கிடைக்கும் வகையில் அவர்களின் பயணம் இருக்க வேண்டும்.
அதற்கு ஊழியர்களின் அறிவுறுத்தல்களை கேட்டு, அதன்படி பயணிகள் நடந்து கொள்ள வேண்டும். விதிகள் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக உள்ளது. விமான பணியாளர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் இருப்பதற்கு மன்னிப்பு கிடையாது.
விடுமுறைக்கு நல்ல முறையில் நேரம் செலவிட, பொழுதுபோக்க செல்லும் மக்களை தடுத்து நிறுத்த ஒருவரும் விரும்புவதில்லை. ஆனால், மற்ற பயணிகள், பணியாளர்களிடம் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உள்ளது.
அதனால், ஒரு சில சிறிய அளவிலான பயணிகள், விமான பயணத்தில் ஒவ்வொருவருக்கும் அசவுகரியம் ஏற்படுத்துவதற்கு நாங்கள் மன்னிப்பு அளிப்பது இல்லை என கூறியுள்ளார்.
இதனால், பல்வேறு நாடுகளும் அதுபோன்ற விதிமீறும் பயணிகளின் நாடு, அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட இடத்தில் இருந்து புறப்பட்டவர்கள் என்ற வேற்றுமையின்றி, அவர்களை விசாரணைக்கு உட்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அந்த அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.