முஷரப்பின் மரண தண்டனையை உறுதி செய்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு


முஷரப்பின் மரண தண்டனையை உறுதி செய்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு
x

கோப்புப்படம்

முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி பாகிஸ்தான் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இஸ்லாமாபாத்,

மறைந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் கடந்த 2007-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை அவர் முடக்கினார். இது தொடர்பாக 2013-ம் ஆண்டு அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக என கூறி, முஷரப் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாய் சென்றார். அதன் பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார்.

இந்த சூழலில் தேச துரோக வழக்கில் முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி பாகிஸ்தான் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முஷரப் தரப்பில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி முஷரப்பின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி முஷரப் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் முஷரப்பின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் 4 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முஷரப்பின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.


Next Story