பாகிஸ்தானில் தேர்தலை தள்ளி வைக்க உயர்மட்ட குழு ஒப்புதல்
பாகிஸ்தானில் தேர்தலை தள்ளி வைக்க உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் நாடாளுமன்றம் அதன் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே கடந்த 9-ந் தேதி கலைக்கப்பட்டது. அந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் 90 நாட்களுக்குள் அடுத்த தேர்தலை நடத்த வேண்டும். அதாவது வருகிற நவம்பர் மாதம் 9-ந் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உள்ளது.
அதே சமயம் பாகிஸ்தானில் கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட 7-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு அரசாங்கம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு அங்கீகரிக்கப்பட்ட பிறகு தொகுதிகளுக்கான புதிய எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் அதற்கு ஏற்பட்டு இருக்கிறது.
ஏனென்றால் புதிய எல்லை வரையறை செய்தால்தான் வாக்காளர்களுக்கு நாடாளுமன்றத்தில் உண்மையான பிரதிநிதித்துவம் இருக்கும். எனவே அங்கு பொதுத்தேர்தல் தள்ளிப்போகும் சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு பாகிஸ்தானின் உயர்மட்ட தேர்தல் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.