இம்ரான்கானை இன்று ஐகோர்ட்டில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராகுமாறு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), கடந்த 9-ந் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு வந்தபோது, அவரை துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஊழல் செய்து, அல்காதிர் அறக்கட்டளை விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இம்ரான்கான் கைது விவகாரம், அவரது கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை 8 நாள் ஊழல் தடுப்பு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
நாடெங்கும் வன்முறை
இம்ரான்கான் கைது செய்யப்பட்டது முதல் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர் என நாடெங்கும் இம்ரான்கான் கட்சியினர் வன்முறை போராட்டங்களில் இறங்கினர். அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. போலீஸ் நிலையங்களும் தாக்கப்பட்டன. லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வீட்டையும் போராட்டக்காரர்கள் தாக்கினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். பிரதமர் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போராட்ட வன்முறையில் 8 பேர் பலியாகி விட்டனர்.
இம்ரான்கான் மீது புதிய வழக்கு
இம்ரான்கான் கைதைத் தொடர்ந்து லாகூரில் அவருடைய ஆதரவாளர்கள் ராணுவ வாகனங்களையும், சொத்துகளையும் தாக்கினர். அத்துடன் லாகூர் கண்டோன்மென்ட் பகுதியில் ஜின்னா மாளிகை என்று அழைக்கப்படுகிற ராணுவ உயர் அதிகாரி ஒருவரது வீட்டையும் தீயிட்டுக்கொளுத்தினர். மேலும் அங்கிருந்து ரூ.15 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக இம்ரான்கான், அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி உள்பட கட்சியினர் 1,500 பேர் மீது பஞ்சாப் மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வன்முறைப் போராட்டங்களைத் தூண்டி விட்டு, அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்கு பதிவாகி உள்ளது.
முன்னாள் மந்திரி கைது
இந்த வழக்கில் இஸ்லாமாபாத்தில் உள்ள இல்லத்தில் வைத்து ஷா மக்மூத் குரேஷி நேற்று கைது செய்யப்பட்டார். அவர் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இம்ரான்கான் கட்சியினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "போலீசார் என்னை கைது செய்ய என் வீட்டுக்கு வந்துள்ளனர். இது உண்மையான சுதந்திர போராட்டம்" என தெரிவித்துள்ளார்.
கைதை எதிர்த்து இம்ரான்கான் வழக்கு
இதற்கிடையே இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதற்கு எதிராக இம்ரான்கான் சார்பில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி உமர் அத்தா பந்தியல், நீதிபதி முகமது அலி மஜார், அத்தர் மினல்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இம்ரான்கான் வக்கீல், "கைது செய்வதில் இருந்து காத்துக்கொள்வதற்கு முன்ஜாமீன் பெற இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு சென்றார். ஆனால் அவர் அங்கு வைத்து கைது செய்யப்பட்டு விட்டார்" என தெரிவித்தார்.
கைதுக்கு நீதிபதிகள் எதிர்ப்பு
அப்போது நீதிபதிகள், கோர்ட்டு வளாத்தில் வைத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தலைமை நீதிபதி உமர் அத்தா பந்தியல், "கோர்ட்டுகளுக்கு என்று ஒரு மரியாதை உண்டு. ஆனால் கோர்ட்டு வளாகத்தில் வைத்து இம்ரான்கானை கைது செய்ததின் மூலம் கோர்ட்டு அவமதிப்பை ஊழல் தடுப்பு போலீஸ் செய்துள்ளது. ஒவ்வொருவரும் நிவாரணமும், நீதியும் பெறுவதற்கு கோர்ட்டுகள் அணுகக்கூடியவையாக இருக்க வேண்டும். முன்பு சுப்ரீம் கோர்ட்டு வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒருவரை ஊழல் தடுப்பு போலீஸ் கைது செய்தது. ஆனால் கோர்ட்டு அதை ரத்து செய்தது" என கூறினார்.
இம்ரான்கான் வக்கீல் வாதிடுகையில், இம்ரான்கானை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விசாரணையின் ஒரு கட்டத்தில் தலைமை நீதிபதி, "சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு அல்லது ஊழல் தடுப்பு கோர்ட்டில் இருந்து ஒருவரையும் கைது செய்ய முடியாது. மேலும், 1-ந்தேதி அவரை கைது செய்ய வாரண்டு போடப்பட்டுள்ளது. ஆனால் 9-ந் தேதி கைது செய்திருக்கிறீர்கள். 8 நாட்களாக கைது செய்ய முயற்சிக்காதது ஏன்? அவரை கோர்ட்டில் வைத்து கைது செய்ய ஊழல் தடுப்பு போலீஸ் விரும்பியதா?" என கேள்விகளை எழுப்பினார்.
கைது சட்டவிரோதம்
"இம்ரான்கான் கைது சட்டவிரோதம்" என கூறிய நீதிபதிகள், அவரை ஒரு மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்படி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இம்ரான்கான் கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தப்பட்டார்.
அதைத் தொடர்ந்து இம்ரான்கான் இன்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும், ஐகோர்ட்டு உத்தரவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இம்ரான்கான் போலீஸ் லைன் விருந்தினர் மாளிகையில் வைக்கப்படுவார், அவர் கைதியாக கருதப்பட மாட்டார், அவரது பாதுகாப்பை இஸ்லாமாபாத் போலீஸ் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.