பாகிஸ்தான்: லாகூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரிப்பு
லாகூர் நகரில் 6 மண்டலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை மொத்தம் 711 ஆக உள்ளது.
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளிவர கூடிய நய் பாத் என்ற உருது பத்திரிகையில் வெளியான தகவலில், நடப்பு ஆண்டின் 11 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 854 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆனால், இந்த சம்பவங்களில் இதுவரை, குற்றவாளிகளை கைது செய்யும் பாலின குற்ற தடுப்பு பிரிவினரின் நடவடிக்கையில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. போலீஸ் ஆவணத்தின்படி, லாகூர் நகரில் 6 மண்டலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை மொத்தம் 711 ஆக உள்ளது.
இவற்றில் முதல் இடத்தில் கன்டோன்மென்ட் மண்டலம் (241) உள்ளது. தொடர்ந்து 2-வது இடத்தில் சதர் மண்டலம் (197), 3-வது இடத்தில் மாடல் டவுன் மண்டலம் (139), 4-வது இடத்தில் இக்பால் டவுன் மண்டலம் (57), 5-வது இடத்தில் சிவில் லைன்ஸ் மண்டலம் (52), 6-வது இடத்தில் சிட்டி மண்டலம் (45) உள்ளது.
இவற்றில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பெரிய அளவில் நடந்த 8 பாலியல் வன்முறை சம்பவங்களுடன் முதல் மற்றும் 2-வது இடத்தில் முறையே சிட்டி மண்டலம் மற்றும் சதர் மண்டலம் ஆகியவை உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் லர்கானா மாவட்டத்தில் ரதோதிரோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் சிறுமி ஜைனப் ஜங்கிஜோ என்பவர் படித்து வந்ததற்கு கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுமி ஜைனப் தன்னுடைய சகோதரர்களை பைக்கில் ஏற்றி கொண்டு அதனை அவரே தினமும் ஓட்டி செல்வது வழக்கம். இது அந்த கிராமவாசிகளுக்கு பிடிக்கவில்லை.
விவசாயியான அவருடைய தந்தை ஆஷாக் ஜங்கிஜோவிடம் சென்று, இதனை நிறுத்தி கொள்ளும்படி மிரட்டியுள்ளனர். ஆனால், இதனை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராமத்தினர் திட்டம் தீட்டி, ஆஷாக்கின் கோதுமை சேமிப்பு கிடங்கு மீது தீ வைத்து கொளுத்தி விட்டனர். இதில், அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி லஷாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.