பாகிஸ்தான் தேர்தல்: யாருக்கும் மெஜாரிட்டி இல்லை..ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் தீவிரம்


பாகிஸ்தான் தேர்தல்: யாருக்கும் மெஜாரிட்டி இல்லை..ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் தீவிரம்
x
தினத்தந்தி 10 Feb 2024 9:37 AM IST (Updated: 10 Feb 2024 9:54 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சைகளில் 98 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

கராச்சி,

பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் நிறைவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பலரும் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளனர்.

அவருடைய கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட சூழலில், அவருடைய தொண்டர்கள் சுயேச்சைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும்.

இந்த தேர்தலில், எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை வெற்றியை பெறாது என அரசியல் நிபுணர்கள் முன்பே கணித்திருந்தனர். இந்நிலையில், 265 தொகுதிகளில் 4-ல் 3 பங்கு தேர்தல் முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின்படி, இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சைகளில் 98 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று, 3 முறை பிரதமராக இருந்த அனுபவம் வாய்ந்த நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியானது, 69 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றும் முன்னாள் பிரதமரான, சுட்டு கொல்லப்பட்ட பெனாசீர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. பிற தொகுதிகளில், சிறிய கட்சிகள் மற்றும் பிற சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், இந்த அறிவிப்பை ரத்து செய்ய கோரி சில இடங்களில் அரசியல் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்தது. அரசு வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. அவர்களை கலைக்க போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story