நிதி நிர்வாகம் குறித்து பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட முடியாது - பாகிஸ்தான் நிதியமைச்சர்
பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து கூடுதல் தகவல்களை சர்வதேச நாணய நிதியம் கோரியது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் பாகிஸ்தானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அந்நாட்டுக்கு நிதியுதவி மற்றும் கடன்கள் அளிக்க முன்வந்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் வருவாய் மற்றும் செலவுத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் திருப்தியடையவில்லை. இதனையடுத்து பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து கூடுதல் தகவல்களை சர்வதேச நாணய நிதியம் கோரியது. வருவாய் பற்றாக்குறை குறித்த விவரங்களை பாகிஸ்தான் அரசிடம் கேட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசின் விரக்திக்கு மத்தியில் இந்த கோரிக்கைகள் வந்துள்ளன. மேலும், சர்வதேச நாணய நிதியம் - பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இடையேயான கடைசி சந்திப்பு சரியாக அமையவில்லை.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் மீது பாகிஸ்தான் அரசு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அந்நாட்டின் நிதி அமைச்சர் முஹம்மது இஷாக் தர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கெஞ்சவில்லை. நிதியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த விதிமுறைகளை பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட முடியாது.
பணம் வரவில்லை என்றாலும், நாங்கள் சமாளிப்போம். நிதி வழங்கவில்லை என்றாலும், பாகிஸ்தான் கவலைப்படவில்லை. ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி, மக்கள் மீது அரசு சுமையை சுமத்த முடியாது என்று தெரிவித்தார்.