இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை தொடங்க மும்முரம்! இருநாட்டு மந்திரிகள் பேச்சுவார்த்தை


இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை தொடங்க மும்முரம்! இருநாட்டு மந்திரிகள் பேச்சுவார்த்தை
x

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியாக பிலாவல் பூட்டோ பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக சீனாவுக்கு சென்றுள்ளார்.

பீஜிங்,

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு மந்திரியுமான வாங்யீயின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவால் பூட்டோ சர்தாரி 2 நாள் சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.

முன்னதாக சமீபத்தில், அவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர் அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் வளர்ந்து வரும் உறவு, சீனாவுடனான அதன் உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருநாட்டு அரசாங்களிடையேயான ராஜாங்க உறவுகளை ஆரம்பிக்கப்பட்டதன் 71வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த பயணம் அமைந்தது. சீன தலைநகர் பீஜிங்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், அவர்களது சந்திப்பு குவாங்சோவில் நடைபெற்றது.

பிலாவால் பூட்டோ சர்தாரி ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியாகப் பதவி ஏற்றதன் பிறகு சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். மேலும், இரு நாட்டுறவின் வளர்ச்சி மற்றும் இரு தரப்புகளின் ஒத்துழைப்புகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இப்பணயத்தின் போது இரு தரப்பினரும் கலந்தாய்வு நடத்தினர்.

சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய ஆசியாவின் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத நாடு இந்தியா ஆகும். ஏப்ரல் 1, 1950 அன்று முதல் இந்தியா-சீனா உறவு ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மே 21, 1951 இல் பாகிஸ்தானும் சீனாவுடனான உறவை ஆரம்பித்தது.

இந்த பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானில் உள்ள சீன குடிமக்கள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், தாமதத்தால் தடைபட்டுள்ள 60 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு (சீபெக்) புத்துயிர் அளித்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைக்கப்படுவதால், இந்தியா சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனையும் மீறி இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து சீனா செயல்பட்டு வருகிறது. இதனிடையே இந்த பேச்சுவார்த்தை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இரு தரப்பினரும், பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு முயற்சியை உருவாக்க பிராந்திய நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.


Next Story