தேர்தல் மோசடி.. இம்ரான் கான் ஆதரவு சுயேட்சைகளின் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியை தவிர பிற கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
லாகூர்:
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) ஆதரவு பெற்ற சுயேட்சைகள் 101 இடங்களில் வெற்றி பெற்றனர்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் கட்சி அடிப்படையில் அதிக இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பிலாவல் சர்தாரி பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களை கைப்பற்றியது. முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் 17 இடங்களை கைப்பற்றியது. மேலும் 17 தொகுதிகளை சிறிய கட்சிகள் பிடித்து உள்ளன.
ஆட்சியமைக்க 133 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இம்ரான்கானின் கட்சியை தவிர பிற கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதுஒருபுறமிருக்க இம்ரான் கான் கட்சி ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களில் தோல்வியடைந்த 30 பேர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து லாகூர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், தேர்தலில் மோசடி நடைபெற்றதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் முடிவை மாற்றியதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் இந்த மனுக்களை லாகூர் ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. தேர்தல் மோசடி உள்ளிட்ட குறைகளை தீர்ப்பதற்கு மனுதாரர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
பி.டி.ஐ. கட்சியின் மூத்த வழக்கறிஞர் சர்தார் லத்தீப் கோசா கூறும்போது, தங்கள் கட்சி 170 இடங்களில் வென்றதாகவும், மோசடியால் பல இடங்களில் வெற்றி பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த மோசடியால் பி.டி.ஐ. கட்சி சுமார் 80 இடங்களை இழந்ததுடன், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது தடுக்கப்பட்டது. பறிக்கப்பட்ட இடங்களை திரும்ப பெற சட்டப்போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவுகளை வெளியிடுவதை பல மணி நேரம் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்ததால் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.