பாகிஸ்தான்: புகாரளிக்க சென்ற கர்ப்பிணியை ரோந்து சென்ற கான்ஸ்டபிள் பலாத்காரம் செய்த அவலம்
பாகிஸ்தானில் கணவருடன் சண்டை போட்டு விட்டு புகார் கொடுக்க போலீசாரிடம் சென்ற கர்ப்பிணியை கான்ஸ்டபிள் பலாத்காரம் செய்த அவலம் நடந்து உள்ளது.
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் வசித்து வரும் இளம் கர்ப்பிணி ஒருவர், சில தினங்களுக்கு முன் அவரது கணவருடன் சண்டை போட்டுள்ளார். இதன்பின்னர், உதவி கேட்டு அந்த பகுதியில் இருந்த நூன் காவல் நிலையம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிளை சீருடையில் பார்த்திருக்கிறார். அவரிடம் சென்று காவல் நிலையம் செல்வதற்கான வழி கேட்டுள்ளார்.
அதற்கு அவர், காவல் நிலையத்தில் கொண்டு சென்று விடுகிறேன் என கூறி அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், அதற்கு பதிலாக ஜாங்கி சையதன் என்ற இடத்தில் உள்ள பிளாட் ஒன்றிற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் டான் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த சம்பவத்தில், டால்பின் அவசரகால அதிரடி படை என்ற பிரிவுடனும் அந்த கான்ஸ்டபிள் தொடர்பில் இருந்துள்ளார். அந்த பிரிவை பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா கடந்த 21-ந்தேதி தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த பலாத்கார சம்பவம் வெளியே தெரிய வேண்டாம் என 2 நாட்களாக வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்து உள்ளது. விசாரணை என்ற பெயரில் காலநீட்டிப்பை அதிகாரிகள் செய்து வந்தனர்.
எனினும், விசாரணையில் அந்த கர்ப்பிணி பெண்ணை கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்திருந்தது நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.