வன்முறை வழக்குகளில் இருந்து இம்ரான் கான் விடுதலை
இம்ரான் கான் மீதான சில வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
இம்ரான் கான் மீது கிட்டத்தட்ட 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் சில வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். அவர் மீதான மற்ற வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அவ்வகையில், 2022-ல் ஆட்சி கவிழ்ப்புக்குப்பின் நடந்த பேரணியின்போது பதிவு செய்யப்பட்ட இரண்டு வன்முறை-நாசவேலை வழக்குகளில் இருந்து இம்ரான் கானை இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டு இன்று விடுதலை செய்தது. இம்ரான் கான் தவிர, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி, முன்னாள் தகவல் தொடர்பு துறை மந்திரி முராத் சயீத் மற்றும் அவரது கட்சியின் (பி.டி.ஐ.) பிற தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த மாத தொடக்கத்தில், வேறு இரண்டு நாசவேலை வழக்குகளில் இருந்து இம்ரான் கானை இஸ்லாமாபாத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.