பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு


பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு
x

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போர்ட் மோர்ஸ்பை,

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் சேதமடைந்தன. நேற்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், இந்த நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 300க்கும் மேல் உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடங்கள் இன்று தெரிவித்துள்ளன. இதுகுறித்து எங்கா மாகாணத்தில் உள்ள லகாயிப் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அய்மோஸ் அகேம் கூறுகையில், "இந்த நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டன" என்றார்.

இதனால் ஏற்பட்ட துல்லியமான பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story