பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்: குடும்பத்தினர் தகவல்


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்: குடும்பத்தினர் தகவல்
x

Image Courtacy:AFP

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

துபாயில் வசித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளார். இன்று காலை அவரது உடல் நிலை மோசமாக இருந்த நிலையில் அவர் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானநிலையில் பின்னர் அவை நீக்கப்பட்டன.

இந்நிலையில், முஷாரப்பின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், மிகவும் கவலைக்கிடமான நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்துள்ள விளக்கத்தில்,, "முஷாரப் வென்டிலேட்டரில் இல்லை. மூன்று வார காலமாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மிக மோசமான நிலையில் உள்ள அவர் மீண்டுவருவது இயலாத ஒன்று. அவரது உறுப்புகள் செயல்படவில்லை. எனவே, அவர் கஷ்டமில்லாது வாழ பிரார்த்தனை செய்யுங்கள்" என்று அதில் தெரிவித்துள்ளனர்.

பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானின் அதிபராக இருந்த காலத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்தார். மேலும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் அவர் சிறையில் அடைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து அவர் மீது 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக் கூறி, பாகிஸ்தானிலிருந்து முஷாரப் வெளியேறி துபாய் சென்றுவிட்டார். பின்னர் அங்கேயே அவர் தங்கிவிட்டார்.

முன்னதாக தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு கோர்ட்டு தூக்கு தண்டனையை அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் ஐகோர்ட்டு, பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது முஷாரப்பின் உடல் நிலை மோசமாகி உள்ளது.


Next Story