திருமணம் செய்ய சென்றீர்களா? - கணவனை கைவிட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண் அளித்த பதில்


திருமணம் செய்ய சென்றீர்களா? - கணவனை கைவிட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண் அளித்த பதில்
x
தினத்தந்தி 24 July 2023 6:31 PM IST (Updated: 24 July 2023 6:37 PM IST)
t-max-icont-min-icon

கணவன் , குழந்தைகளை கைவிட்ட ராஜஸ்தான் பெண் அஞ்சு காதலன் நஸ்ருல்லாவை பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (வயது 30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். சீமா ஹைதர் பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (வயது 23) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதனிடையே, சீமா ஹைதர் தனது கணவரை கைவிட்டு 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் சென்று அங்கிருந்து இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். இந்தியாவுக்குள் நுழைந்த சீமா தன் காதலன் சச்சினுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக சீமாவும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சச்சினும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டனர். பின்னர், அவர்களுக்கு கடந்த 7-ம் தேதி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

தற்போது சீமா தான் பாகிஸ்தான் திரும்பி செல்ல விரும்பவில்லை என்றும், சச்சினை திருமணம் செய்துகொண்டதாகவும், இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறி உள்ளார். ஆனால் சிலர் சீமாவை பாகிஸ்தான் உளவாளியாக கருதி தண்டிக்க கோரியும், சிலர் அவரது காதலுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். அவர் எல்லை தாண்டிய காதலரா அல்லது உளவாளியா என்பதை விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவன், குழந்தைகளை கைவிட்டு காதலனை தேடி பாகிஸ்தான் சென்றுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கெய்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு ராஜஸ்தானை சேர்ந்த அரவிந்த் என்பவருன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். அஞ்சு தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் பிஹ்வாடி பகுதியில் வசித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் அஞ்சுக்கு பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற நபருடன் 2019-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, தனது கணவர், குழந்தைகளை கைவிட்ட அஞ்சு தனது காதலன் நஸ்ருல்லாவை பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளார்.

முறையாக விசா பெற்று கடந்த 20-ம் தேதி அஞ்சு பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர் தனது காதலன் நஸ்ருல்லாவை சந்தித்துள்ளார். தற்போது அஞ்சு பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் அப்பர் டிர் மாவட்டம் குல்ஷொ கிராமத்தில் உள்ள தனது காதலன் நஸ்ருல்லாவின் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நான் சீமா ஹைதர் போன்று அல்ல... விரைவில் இந்தியா வந்துவிடுவேன் என்று காதலனை பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ள அஞ்சு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பாகிஸ்தானில் உள்ள அஞ்சு கூறியதாவது:-

கேள்வி: தற்போது எங்கு உள்ளீர்கள் அஞ்சு?

பதில்: நான் தற்போது பாகிஸ்தானில் உள்ளேன். இது மணாலி போன்ற மலைப்பகுதி. நான் பாதுகாப்பாக உள்ளேன்.

கேள்வி: பாகிஸ்தான் செல்வது குறித்து உங்கள் கணவரிடம் கூறினீர்களா?

பதில்: இல்லை. நான் யாரிடமும் எதுவும் கூறவில்லை. சுற்றுலா தலங்களை பார்க்க ஜெய்ப்பூர் செல்வதாக நான் என் கணவரிடம் கூறினேன்.

கேள்வி: நீங்கள் ஏன் பாகிஸ்தான் சென்றீர்கள்?

பதில்: சுற்றுலா தலங்களை பார்க்க நான் இங்கு வந்துள்ளேன். நான் அனைத்து சட்டநடவடிக்கைகளையும் பின்பற்றி அனைத்திற்கும் தயாராக வந்துள்ளேன். இங்கு ஒரு திருமண நிகழ்ச்சி உள்ளது அதில் நான் பங்கேற்க வேண்டும்.

கேள்வி: பிஹ்வாடியில் இருந்து எவ்வாறு பாகிஸ்தான் சென்றீர்கள்?

பதில்: நான் வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றேன். பிஹ்வாடியி இருந்து முதலில் டெல்லி சென்றேன். அங்கிருந்து அம்ரித்சர் சென்றேன். அங்கிருந்து வாகா எல்லை சென்று அங்கிருந்து பாகிஸ்தான் சென்றேன்.

கேள்வி: பாகிஸ்தானில் யாருடன் தங்கி உள்ளீர்கள்?

பதில்: எனக்கு இங்கு நண்பர் உள்ளார். எங்கள் குடும்பங்களுக்கு இடையே நல்ல உறவு உள்ளது. நாங்கள் 2 ஆண்டுகளுக்கு முன் நண்பர்கள் ஆனோம். இங்கு ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ள நான் இங்கு வந்தேன். சுற்றுலா பயணங்களுக்கு இது நல்ல இடம். ஆகையால் நான் இங்கு வந்தேன். எனக்கு இங்கு வேறு எதுவும் இல்லை. சீமா ஹைதருடன் என்னை ஒப்பிடுவது தவறானது. நான் மீண்டும் இந்தியா திரும்புவேன். நான் இங்கு பாதுகாப்பாக உள்ளேன்.

கேள்வி: இந்தியா திரும்புவதற்கான உங்கள் திட்டம் என்ன?

பதில்: இன்னும் 2 முதல் 4 நாட்களில் இந்தியா திரும்புவேன்.

கேள்வி: நஸ்ருல்லாவை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்றீர்களா?

பதில்: இல்லை, அதுபோன்று எதுவும் இல்லை. ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன. நான் சீமா ஹைதர் போன்று அல்ல.

கேள்வி: இருவருக்கும் இடையேயான நெருக்கம் எவ்வாறு ஏற்பட்டது

பதில்: எங்கள் நட்பு 2020ம் ஆண்டு தொடங்கியது. வேலை காரணமாக நான் பேஸ்புக்கை பயன்படுத்த தொடங்கினேன். அப்போது தான் நாஸ் நஸ்ருல்லாவுடன் பேசத்தொடங்கினேன். பேஸ்புக்கில் தொடங்கி பின்னர் நாங்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டோம். பின்னர் வாட்ஸ் அப்பில் பேசத்தொடங்கினோம். எனக்கு நஸ்ருல்லாவை 2 முதல் 3 ஆண்டுகள் தெரியும். இது பற்றி முதல் நாளே எனது அம்மா, சகோதரியிடம் நான் கூறிவிட்டேன்.

கேள்வி: உங்கள் கணவரிடமிருந்து பிரிய விரும்புகிறீர்களா?

பதில்: ஆம். தொடங்கத்தில் இருந்தே எங்கள் உறவு சரியாக இல்லை. சில சூழ்நிலைகளால் தான் நான் அவருடன் வாழ்ந்துவந்தேன். ஆகையால் தான் எனது சகோதரன் மற்றும் அவரது மனைவியை என்னுடன் அழைத்துக்கொண்டேன். எனது குழந்தைகளுக்காகத்தான் நான் அவர்களுடன் வாழ்ந்துவந்தேன். இந்த சூழ்நிலையில் நான் குருகிராமில் வேலைக்கு சேர்ந்தேன். நஸ்ருல்லாவை திருமணம் செய்ய எனக்கு எந்த திட்டமும் இல்லை. தற்போது இந்த பகுதியை சுற்றிப்பார்க்கவே இங்கு வந்தேன். நான் இந்தியா திரும்பி எனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியே வாழ விரும்புகிறேன்.

கேள்வி: பாகிஸ்தான் செல்ல அலுவலகத்தில் எத்தனை நாட்கள் விடுப்பு எடுத்தீர்கள்?

பதில்: இந்த பகுதியை சுற்றிப்பார்க்க எனது அலுவலகத்தில் நான் 10 நாட்கள் விடுப்பு எடுத்தேன். அதேவேளை எனது விடுப்பு அதிகரித்தால் அவர்கள் வேறு நபரை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம் என நான் நிறுவனத்தில் கூறிவிட்டேன்.

கேள்வி: நீங்கள் இந்தியாவுக்கு வரவும் உங்கள் குடும்பத்துடன் வாழவும் விரும்புகிறீர்களா? அல்லது பாகிஸ்தானில் இருக்க விரும்புகிறீரா?

பதில்: இது குறித்து உறுதியான முடிவை தற்போதுவரை நான் எடுக்கவில்லை. நான் விரைவில் இந்தியா வருவேன். வருங்காலத்தில் ஏதேனும் முடிவு எடுத்தால் அதை தெரிவிப்பேன்' என்றார்.

இந்த சூழ்நிலையில் அஞ்சுவை திருமணம் செய்யும் திட்டமில்லை என்று நஸ்ருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நஸ்ருல்லா கூறியதாவது:-

அஞ்சு பாகிஸ்தான் வந்துள்ளார். நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. நாங்கள் நண்பர்கள். விசா காலாவதியான உடன் ஆகஸ்ட் 20ம் தேதி அஞ்சு அவரது நாட்டிற்கு சென்றுவிடுவார்.

எங்கள் குடும்பத்தின் பெண்களுடன் தனி அறையில் அஞ்சு தங்கியுள்ளார். எங்களுக்கு மாவட்டம் நிர்வாகம் தரப்பில் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

இந்திய பெண் அஞ்சு பாகிஸ்தானின் குல்ஷொ கிராமத்தில் வசித்து வருவது குறித்து அம்மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், விசா ஆவணங்களின் அடிப்படையில் அந்த பெண் நிச்சயம் அடுத்த மாதம் 20ம் தேதி இந்தியாவுக்கு சென்றுவிடுவார்' என்றார்.

இதன் மூலம் பேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவை பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ள ராஜஸ்தான் பெண் அஞ்சு அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் இந்தியா திரும்புவார் என தெரியவந்துள்ளது.


Next Story