தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்த வேண்டும் - அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை
தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் கடுமையான பதிலடி தரப்படும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பியாங்யாங்,
வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இதனை பொருட்படுத்தாமல் கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின. இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா தனது பாதுகாப்பு நலன்களுக்குப் பொருந்தாத எந்தவொரு தீவிரமான முன்னேற்றங்களையும் விரும்பவில்லை என்றால், அது பயனற்ற போர் பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால், அது அனைத்து விளைவுகளுக்கும் முற்றிலும் பழியை ஏற்க வேண்டியிருக்கும். கடுமையான ராணுவ ஆத்திரமூட்டல்களில் அமெரிக்கா தொடர்ந்து நீடித்தால் வடகொரியா மிகவும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை கையில் எடுக்கும்" என கூறப்பட்டுள்ளது.