ஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்து, அதிர வைத்த வடகொரியா
ஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா உலக நாடுகளை அதிர வைத்தது.
அணு ஆயுதங்களால் அச்சுறுத்தல்
வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் அமெரிக்கா, வடகொரியா நேரடியாக எதிர்த்து வருகிறது.
வடகொரியா தனது அணுஆயுதங்களை கைவிடுவதற்கு அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.
70-க்கும் அதிகமான ஏவுகணைகள்
இத்தகைய தடைகளால் வடகொரியாவின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு சென்றபோதும் கூட அதனை ஒரு பொருட்டாக கருதாமல் வடகொரியா தனது அடாவடி போக்கை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் முந்தைய காலங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே வடகொரியா தொடர்ச்சியாக பல வகையான ஏவுகணைகளை சோதித்து அதிர வைத்து வந்தது.
கடந்த ஓர் ஆண்டில் 70-க்கும் அதிகமான ஏவுகணைகளை வடகொரியா சோதித்தது. அவற்றில் பல ஏவுகணைகள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானைத் தாக்கும் வகையில் அணு ஆயுத திறனுடன் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
ஆண்டின் கடைசி நாளிலும்...
இந்த நிலையில் ஆண்டின் கடைசி நாளான இன்றும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. ஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அதிர வைத்தது.
இதுகுறித்து தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைமை வெளியிட்ட அறிக்கையில், "சனிக்கிழமை காலை வடகொரிய தலைநகரான பியாங்யாங்கிற்கு தெற்கே உள்ள உள்நாட்டுப் பகுதியில் இருந்து அடுத்தடுத்து, 3 ஏவுகணைகள் வீசப்பட்டன. அவை 350 கி.மீ. தூரத்துக்கு பறந்து சென்று, கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல் பகுதியில் விழுந்தன. முதற்கட்ட மதிப்பாய்வின் அடிப்படையில் 3 ஏவுகணைகளும் தென்கொரியாவை இலக்காகக் கொண்டு சோதிக்கப்பட்டதாக தெரிய வந்திருக்கிறது" என கூறப்பட்டுள்ளது.
டிரோன்களை அனுப்பியதால் பரபரப்பு
அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் கட்டளை பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்த ஏவுகணைகள் வட கொரியாவின் சட்டவிரோத ஆயுதத் திட்டங்களின் உறுதியற்ற தாக்கத்தை எடுத்துக்காட்டுவதாகவும், தென்கொரியா மற்றும் ஜப்பானின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடுகள் இரும்புக் கவசமாக இருக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் தனது முதல் உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக தென்கொரியா நேற்று முன்தினம் திடவ எரிபொருள் ராக்கெட் என்ஜினை வெற்றிகரமாக சோதித்த மறுநாள் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, 2017-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வடகொரியா தென்கொரியாவுக்குள் 5 டிரோன்களை அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.