நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை


நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
x

தொழிலாளர் சட்டத்தை மீறியதாக முகமது யூனுஸ் மற்றும் 3 நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

டாக்கா:

வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் முகமது யூனிஸ் (வயது 83). பொருளாதார வல்லுநரான இவர், கிராமீன் வங்கி மூலமாக வறுமை ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக, கடந்த 2006ம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு வென்றார்.

இந்நிலையில், இவர் கிராமீன் டெலிகாம் தலைவராக பதவி வகித்தபோது, தொழிலாளர் நல நிதியை உருவாக்கத் தவறியதாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொழிலாளர் சட்டத்தை மீறியதாக முகமது யூனுஸ் மற்றும் 3 நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது முகமது யூனுஸ் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 6 மாத சிறைத்தண்டனையும், 25,000 டாகா (வங்காளதேச கரன்சி) அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து தண்டனை பெற்ற 4 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மனுவை உடனடியாக பரிசீலனை செய்த நீதிமன்றம், ஒரு மாதம் ஜாமீன் வழங்கியது. தொழிலாளர் சட்டத்தின்படி, 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தூண்டுதல் காரணமாக முகமது யூனுசுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.


Next Story