ஓமனில் மதவழிபாட்டு தலம் அருகே துப்பாக்கி சூடு - 9 பேர் பலி
ஓமனில் மதவழிபாடு தலம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
மஸ்கட்,
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் நகரில் வாதி அல் கபீர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் இமாம் அலி பள்ளிவாசல் என்ற இஸ்லாமிய மத வழிபாடு தலம் உள்ளது. இந்த வழிபாடு தலத்தில் இன்று அதிகாலை (அந்நாட்டு நேரப்படி) 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் மதவழிபாட்டு தலம் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இந்நிலையில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி, 4 பாகிஸ்தானியர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக போலீசார் நடத்திய தாக்குதலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் ஓமன் துப்பாக்கி சூடு தாக்குதலில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
சன்னி பிரிவினரை பெரும்பான்மையாக கொண்ட ஓமனில் ஷியா பிரிவு மத வழிபாட்டு தலமான இமாம் அலி பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, ஓமன் நாட்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 40 சதவீதம் பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.