விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க வீராங்கனை நிக்கோல் மான்


விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க வீராங்கனை நிக்கோல் மான்
x

விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி என்ற பெருமையை நிக்கோல் ஆனாப்பு மான் பெறுகிறார்.



நியூயார்க்,



சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஐந்து ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. ரஷ்யாவிற்கு சொந்தமாக இரண்டு சிறிய ஆராய்ச்சி கூடங்களும், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு ஆராய்ச்சி கூடங்களும் உள்ளன.

இந்த கூடங்களில் ஆண் மற்றும் பெண் வீரர், வீராங்கனைகள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி என்ற பெருமையை நிக்கோல் ஆனாப்பு மான் பெறுகிறார். இந்த சந்தர்ப்பத்திற்காக அவர் 9 ஆண்டுகளாக காத்திருக்கிறார்.

இதுபற்றி நாசா அமைப்பு கூறும்போது, 2013-ம் ஆண்டு ஜூனில் நாசாவால், நிக்கோல் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் என்ற விண்கலத்தில் வருகிற 5-ந்தேதி பயணம் செய்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைகிறார் என தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பகுதியை சேர்ந்தவரான நிக்கோல், இயந்திரவியல் பொறியியல் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். இரண்டு முறை விமானந்தாங்கி கப்பல்களில் பயணம் செய்த அனுபவம் கொண்டதுடன், அமெரிக்க கடற்படையில் கர்னலாகவும் பணியாற்றியவர்.

இந்த விண்வெளி வீரர்கள், தேவைப்படும்போது விண்வெளி நிலையத்திற்கு வெளியே வந்து பராமரிப்பு பணிகளை செய்ய கூடிய நிகழ்வுகளும் உண்டு. இதற்கான விண்கலம், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்படும்.

இதற்கு முன்பு, 2002-ம் ஆண்டில் ஜான் ஹெர்ரிங்டன் என்ற பூர்வீக அமெரிக்க வீரர் முதன்முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அந்த வரிசையில், நிக்கோல் மான் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி என்ற வரலாறு படைக்கிறார்.


Next Story