உருகும் பனிப்பாறைகள்.. ஐ.நா. பொது சபையில் பிரச்சினையை முன்வைக்கும் நேபாள பிரதமர்


உருகும் பனிப்பாறைகள்.. ஐ.நா. பொது சபையில் பிரச்சினையை முன்வைக்கும் நேபாள பிரதமர்
x

ஐ.நா. தலைமையகத்தில் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் நேபாள பிரதமர் சர்மா ஒலி கலந்துகொள்கிறார்.

காத்மாண்டு:

புவி வெப்பமயமாதல் காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் இமயமலை உருகி கடல் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. முன்னர் மதிப்பிட்டதை விட கடல் நீர்மட்டம் உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் கடலோர பகுதிகள் பாதிக்கப்படும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான கடலோர பகுதிகள், சிறிய தீவுகள், சிறிய கடலோர கிராமங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கு இடையிலான குழு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்வு தொடர்பான பிரச்சினையை ஐ.நா. பொது சபை கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்தார்.

நேபாள பிரதமராக பொறுப்பேற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக வரும் 20-ம் தேதி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் செல்கிறார் சர்மா ஒலி. அங்குள்ள ஐ.நா. தலைமையகத்தில் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் 'எதிர்காலத்திற்கான மாநாட்டில்' கலந்துகொள்கிறார்.

இந்த பயணம் தொடர்பாக இன்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் பிரதமர் சர்மா ஒலி பேசினார். அப்போது, மனித இனம் மற்றும் பூமியின் பாதுகாப்பு, இமயமலை மற்றும் பெருங்கடல்களின் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாப்பது குறித்து நேபாளத்தின் தெளிவான பார்வையை முன்வைக்கவிருப்பதாக கூறினார்.

'ஐ.நா. சாசனத்தின்படி, மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிட கூடாது மற்றும் நாட்டின் உள் விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிட அனுமதிக்க கூடாது என்ற நேபாளத்தின் கொள்கையை ஐ.நா. பொது சபையில் தெரிவிப்பேன். நேபாளத்தின் அரசியலமைப்பு, ஜனநாயக மதிப்புகள், இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு தேசம் என்ற அடையாளம், நியாயமான தேசிய நலன் மற்றும் சர்வதேச அளவில் அர்ப்பணிப்பு போன்றவற்றில் தெளிவான பார்வையை முன்வைப்பேன்' என்றும் சர்மா ஒலி தெரிவித்தார்.


Next Story