அடுத்த மாதம் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்


அடுத்த மாதம் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்
x

கோப்புப்படம் 

பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழி நடத்த வசதியாக அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாகூர்,

கடந்த 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீபுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

உடல்நல பாதிப்புக் காரணமாக சிகிச்சை பெற லாகூர் நீதிமன்ற அனுமதியுடன் 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற ஷெரீப் அதன் பின் நாடு திரும்பவில்லை. பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமாக பொறுப்பேற்றார். மேலும் நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டைடையும் ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கி உள்ளது.

இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு புதிததாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். பதவி காலம் நிறைவு பெறுவதால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழி நடத்த வசதியாக லண்டனில் இருந்து அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகி ஒருவரும் ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த கட்சி ஒப்புக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க சட்ட திருத்தம் கொண்டு வர ஷபாஸ் அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக தமது எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் லண்டன் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார். புதிய ராணுவ தளபதி நியமனம், பாகிஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.


Next Story