போயிங் விண்கலத்தில் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப நாசா மீண்டும் முயற்சி


போயிங் விண்கலத்தில் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப நாசா மீண்டும் முயற்சி
x

போயிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலங்கள் உதவியுடன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, செல்வதற்கு வேண்டிய பணிகளை நாசா செய்து வருகிறது.

கேப் கேனவெரல்,

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் உதவியுடன், நாசாவின் விமானிகளான பட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை அனுப்ப முடிவு செய்தது. எனினும், ராக்கெட் தொடர்பான கோளாறுகளால் 2 முறை இந்த திட்டம் தள்ளி போனது.

3-வது முறையாக இந்த திட்டம் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர்கள் இருவரும் குறைந்தது ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு பணியில் ஈடுபடுவார்கள். இதன்பின்னர், அமெரிக்காவின் மேற்கு பகுதிக்கு வந்திறங்குவார்கள்.

போயிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலங்கள் உதவியுடன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, செல்வதற்கு வேண்டிய பணிகளை நாசா செய்து வருகிறது.

ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் 2020-ம் ஆண்டு முதல் வீரர்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஆட்கள் யாருமின்றி, போயிங் விண்கலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மென்பொருள் கோளாறுகளால், இந்த பரிசோதனை முயற்சி குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்தது.

2022-ம் ஆண்டு ஆட்களுடன் முதன்முறையாக விண்வெளிக்கு போயிங் செல்ல திட்டமிடப்பட்டது. எனினும், பாராசூட் கோளாறு மற்றும் பிற காரணங்கள் கண்டறியப்பட்டு, தாமதமடைந்தது. கடந்த மே மாதம் அட்லஸ் ராக்கெட்டின் உள்ளே வால்வு ஒன்று பழுதடைந்து 2-வது முறையாக விண்வெளிக்கு வீரர்கள் செல்வது தடைப்பட்டது.

இந்த சூழலில் 3-வது முறையாக, விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தில் நாசா வெற்றியை எதிர்பார்த்து உள்ளது. இந்த இரு வீரர்களில், சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவார்.


Next Story