சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதங்கள் தங்கி ஆய்வு: டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது


சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதங்கள் தங்கி ஆய்வு: டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
x

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

அமீரக வீரர் விண்வெளிக்கு பயணம்

இதில் பயணமாகும் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதங்கள் தங்கி ஆய்வு பணியில் ஈடுபடுகிறார். அமீரக வீரருக்கு, அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அமீரகத்தின் முதல் விண்வெளி வீரர் ஹசா அல் மன்சூரி கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று 8 நாட்கள் தங்கியிருந்து மீண்டும் பூமிக்கு திரும்பி வந்து வரலாற்று சாதனை புரிந்தார்.

அமீரக விண்வெளி வீரர்

அப்போது மாற்று விண்வெளி வீரராக அவருடன் 41 வயதுடைய சுல்தான் அல் நியாதியும் பயிற்சி பெற்று இருந்தார். தொடர்ந்து இருவருக்கும் அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசா சார்பில் விண்வெளியில் நடைபயிற்சி, சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்யும் 20 மாத கால பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் தற்போது நாசாவில் பயிற்சி பெற்ற அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதியும் தனது பங்கிற்கு முதல் முறையாக விண்வெளியில் கால் பதித்து சாதனை படைக்கிறார். இவர் விண்வெளிக்கு செல்லும் அமீரகத்தின் இரண்டாவது வீரர் எனவும், சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்யும் முதல் அரபு விண்வெளி வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

நாசவின் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று நீண்ட காலம் ஆய்வு செய்யும் 'ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-6' என்ற பயணத்திட்டத்தில் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி, அமெரிக்காவை சேர்ந்த நாசா விண்வெளி வீரர்கள் கமாண்டர் ஸ்டீபன் போவன், பைலட் வாரன் ஹோபர்க் மற்றும் ரஷியாவின் ராஸ்காஸ்மோஸ் விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் ஆண்ட்ரே பெடியேவ் ஆகியோர் பயணம் செய்கின்றனர்.

நாசாவில் சிறப்பு பயிற்சி...

இதற்கு முதற் கட்டமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலமான டிராகன் கேப்சூலில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நாசாவின் சக விண்வெளி வீரர்களுடன் சுல்தான் அல் நியாதியும் கலந்துகொண்டார். டிராகன் விண்கலத்தில் அமர்ந்துதான் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி மற்றும் சக விண்வெளி வீரர்கள் பயணம் செய்ய உள்ளனர். இது பால்கன் 9 ராக்கெட்டின் நுனி பகுதியாக பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இதில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்தை அடைவதற்கு 24 மணி நேரம் தங்கி இருக்க வேண்டும். பிறகு அங்கு பணி முடிந்த பிறகு இதே கேப்சூலில் பூமிக்கு திரும்பி வர வேண்டும். இந்த விண்கலம் பூமியின் கடல் பகுதியில் வந்து விழும். அப்போது தண்ணீரில் இருந்து வெளியே வருவதற்கான அவசரகால பயிற்சிகளும் விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் மட்டுமல்லாமல் ராக்கெட்டில் உயரே எழும்பி செல்லும்போது கேப்சூல் அதிவேகமாக சுழலும் சூழ்நிலையை கையாளுவது, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து செல்வது போன்ற சவால்களை சமாளிக்கவும் சுல்தான் அல் நியாதி பயிற்சி பெற்றுள்ளார்.

ஒத்திவைப்பு...

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குரூ 6 என்ற பயண திட்டம் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கனவே சோயூஸ் கேப்சூல் பழுதடைந்ததால் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்ட 3 ரஷிய விண்வெளி வீரர்களை புதிய விண்கலத்தை அனுப்பி மீட்கும் திட்டம் நடைபெற்றதால், இந்த பயணம் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி தேதி அறிவிக்கப்பட்டு பிறகு அதற்கு அடுத்த நாளான 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் ராக்கெட் புறப்படுவதற்கு கடைசி 2½ நிமிடங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் நேற்று மாற்று தேதி அறிவிக்கப்பட்டது.

குடும்பத்தினருடன் சந்திப்பு....

இதைத்தொடர்ந்து நேற்று அமீரக வீரர் சுல்தான் அல் நியாதியின் விண்வெளி பயணத்திற்கு வழி அனுப்புவதற்காக துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மைய அதிகாரிகள் அந்த மையத்தின் பொது இயக்குனர் யூசுப் ஹமத் அல் ஷைபானி தலைமையில் அமெரிக்கவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திற்கு சென்றனர். முன்னதாக அவரை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அதிகாரிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் சுல்தான் அல் நியாதி குழந்தைகளை மட்டும் சந்திக்க அனுமதி தரப்பட்டது. அவர் தனது குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். மற்ற நண்பர்கள் மற்றும் துபாய் விண்வெளி மைய அதிகாரிகளை தொலைவில் இருந்தபடியே கையசைத்து பேசினார்.

டிராகன் விண்கலத்தில்

தொடர்ந்து நேற்று அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள நீல் ஆம்ஸ்ட்ராங் செயல்பாட்டு மையத்தில் இருந்து சுல்தான் அல் நியாதி உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் அனைவரும் பிரத்யேக கார்களில் ஏவுதளத்தில் அழைத்து செல்லப்பட்டனர். இதில் காருக்கு இருவர் என 2 கார்களில் அழைத்து செல்லப்பட்டனர். 39ஏ லாஞ்ச் காம்பளக்ஸ் எனப்படும் ராக்கெட் ஏவுதளத்தில் அந்த விண்வெளி வீரர்கள் அனைவருக்கும் பிரத்யேக 'பிரஷர் சூட்' எனப்படும் உடை அணிவிக்கப்பட்டது.

இந்த உடையானது மிக அதிகமான உயரத்திற்கு செல்லும்போது ஏற்படும் குறைந்த அழுத்தத்தை சமன் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது ஆகும். இதில் அந்த உடை அணிந்த விண்வெளி வீரர்கள் எரிபொருள் நிரப்பாத ராக்கெட்டின் நுனி பகுதியில் பொருத்தப்பட்ட டிராகன் விண்கலத்தில் அமர வைக்கப்பட்டனர். பிறகு அங்கு தொழில்நுட்பங்களை பரிசோதனை செய்து விண்வெளி பயணத்திற்கு தயாரானார்கள்.

வெற்றிகரமாக புறப்பட்டது...

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் 39ஏ என்ற ராக்கெட் ஏவுதளத்தில் பால்கன் 9 ராக்கெட்டின் நுனி பகுதியில் பொருத்தப்பட்டு இருந்தது. பிறகு எரிபொருள் நிரப்பப்பட்டு ராக்கெட் அமீரக நேரப்படி காலை 9.41 மணிக்கு என்ஜின் கவுன்ட் டவுன் மூலம் இயக்கப்பட்டது. இதில் பெரும் நெருப்பு பிழம்பு, புகையை கக்கியபடி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

டிராகன் விண்கலத்தில் இருந்தபடியே காலை 9.43 மணிக்கு சுல்தான் அல் நியாதி தகவல் அனுப்பினார். அதில் அடுத்த முறை உங்களை தொடர்புகொள்ளும்போது சர்வதேச விண்வெளி மையத்தில் இருப்பேன் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

ராக்கெட்டில் இருந்து 9.50 மணிக்கு பிரித்து விடப்பட்ட டிராகன் விண்கலம் அதிவேக பயணத்தை தொடங்கியது. மணிக்கு 28 ஆயிரத்து 163 வேகத்தில் 2-வது கட்டமாக பயணதை மேற்கொண்டது. 9.57 மணிக்கு வயர்லஸ் இணைப்பில் தொடர்பு கொண்டு அரபியில் 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக) என தனது உரையாடலை தொடங்கினார்.

சுஹைல் மாஸ்கட்...

சரியாக 10.30 மணியளவில் அவர் எடையற்ற அதாவது ஜீரோ கிரேவிட்டி எனப்படும் புவியீர்ப்பு விசை இல்லாத நிலைக்கு சென்றார். அப்போது தன் கையில் வைத்திருந்த முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் சுஹைல் என்ற பெயரிலான மாஸ்கட் (கார்ட்டூன் கதாபாத்திர பொம்மை) அவர் கையில் இருந்து விண்கலத்தில் மிதக்க தொடங்கியது. இது புவியீர்ப்பு விசையை காட்டுதற்கான அடையாளமாக பயன்படுத்தப்படும் பொம்மையாகும்.

புவி சுற்றுவட்டப்பா தையில்...

அதற்கு அடுத்தபடியாக 10.45 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் 4 விண்வெளி வீரர்களுடன் புவிசுற்றுவட்டப்பாதையை அடைந்தது. அப்போது அதன் வேகம் தொடர்ந்து மணிக்கு 28 ஆயிரத்து 163 கி.மீ. ஆக இருந்தது. தொடர்ந்து பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்தை எட்டி பிடிக்க 25 மணி நேரம் ஆகும் என நாசா விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி அமீரகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்காக மொத்தம் 19 வகையான அறிவியல் ஆய்வுகளை செய்ய உள்ளார்.

நேரலையில் பார்த்த பட்டத்து இளவரசர்...

இந்த நீண்ட கால விண்வெளி பயண திட்டத்தை நாசா மற்றும் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையங்கள் நேரலை ஒளிபரப்பு செய்தன. துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்திற்கு காலையில் சென்ற பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தும் மிக ஆர்வமாக ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்த்தார்.அங்குள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள பெரிய திரையில் வெற்றிகரமாக டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட பால்கன் 9 ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும் பட்டத்து இளவரசர் உள்பட அனைவரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

அதிபர், துணை அதிபர் வாழ்த்து...

இந்த வெற்றிகரமான விண்வெளி பயணம் குறித்து நேற்று அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-

அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதியின் வெற்றிகரமான விண்வெளி பயணம் அமீரகத்தின் புதிய லட்சியத்தின் தொடக்கமாக உள்ளது. அமீரகத்தின் மகனாக அவர் அதனை தாங்கி செல்கிறார். 2-வது முறையாக அமீரகம் சர்வதேச விண்வெளி மையத்தில் கால்தடம் பதிக்கிறது. இந்த முயற்சி மனிதகுல மேம்பாட்டிற்கு தொடர்ந்து பங்களிப்பை வழங்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறும்போது, அமீரகத்தின் மகனான சுல்தான் அல் நியாதி இறைவன் பாதுகாப்புடன் விண்வெளிக்கு செல்கிறார். நீண்டகாலம் தங்கி ஆய்வு செய்யும் முதல் அரபு விண்வெளி வீரர் என்ற பெருமையை தேடித்தர உள்ளார். இந்த பாதையானது அரபு இளைஞர்களுக்கு நம்பிக்கையையும், அறிவாற்றலையும் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story