அசாமில் கிடைத்த விண்கல்லில் புதைந்துள்ள பூமியின் தொடக்கம் பற்றிய ரகசியம்; விஞ்ஞானிகள் தகவல்
அசாமில் கிடைத்த விண்கல்லில் பூமியின் தொடக்கம் பற்றிய ரகசியம் மறைந்துள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
கவுகாத்தி,
நமது சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் தோன்றியதற்கான அடிப்படை விசயங்கள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன், கார்பன், சோடியம், மாங்கனீசு மற்றும் கந்தகம் ஆகியவை முக்கிய தனிமங்களாக உள்ளன.
இவை ஆவியாக கூடிய தன்மையையும் கொண்டுள்ளன. பாறைகளில் இவை காணப்படும். அதிக வெப்பநிலையில் பாறையில் இருந்து அவை நழுவி செல்லும். அப்போது பாறைகளின் மேற்பகுதியில் துளைகள் உருவாகும்.
இந்த துளைகளை ஒரு கருவியாக உபயோகப்படுத்தி, வாயுக்கள் வெளியேற்றத்தின் இயக்கமுறை, அளவு மற்றும் பாறையில் இருந்து ஆவியானவற்றின் வகைகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும்.
இந்த ஆராய்ச்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அசாமில் கிடைத்த விண்கல் அமைந்துள்ளது. அசாமின் கோலாகட் மாவட்டத்தில் காமர்காவன் நகரம் உள்ளது. இந்த நகர் அருகே பூமியின் அடர் வளிமண்டலத்தின் வழியே விண்கல் ஒன்று நுழைந்து விழுந்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு பின்னர், இதுபற்றிய ஆய்வில் பூமியின் தோற்றம் பற்றிய மிக பெரும் ரகசியம் புதைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த பூமியின் தோற்றத்திற்கான காரணிகளை, ரசாயன கலவை விளக்கும். நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் தூசுகள் ஆகியவற்றின் மையத்தில் இருந்து இவை அனைத்தும் தொடங்குகின்றன.
இதுபற்றி ஜப்பானின் ஹிரோஷிமா பல்கலைக்கழகம் மற்றும் ஆமதாபாத் நகரில் உள்ள இயற்பியல் ஆய்வு கூடம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களோடு, ஐ.ஐ.டி. காரக்பூர் ஆய்வாளர்களும் இணைந்து ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.
அசாமில் கிடைத்த விண்கல்லானது, செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து வந்தது ஆகும். 6.4 கிலோ மீட்டர் அளவுள்ள குறுங்கோள் மற்றொரு விண்கல்லுடன் அதிவேக திசைவேகத்தில் மோதியுள்ளது.
இதில் குறுங்கோளில் இருந்து சில துண்டுகள் உடைந்து பூமியில் விழுந்துள்ளன. அவற்றில் எரிந்தது போக, தப்பி பிழைத்த விண்கல்லே காமர்காவன் விண்கல்லாக நமக்கு கிடைத்துள்ளது. இந்த மோதலில் கிடைத்த விண்கல்லானது, அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை சூழலை எதிர்கொண்டு, அதிர்வுகளையும் தாங்கியுள்ளது.
கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் மேற்பரப்பில் ஏற்படும் மோதல் நிகழ்வுகளானது, சூரிய குடும்பத்தில் நட்சத்திரங்கள், சந்திரன், கோள்கள் உள்ளிட்ட விண்ணுலக பொருட்களின் உருவாக்கம் மற்றும் பரிணாமம் ஆகியவற்றின் அடிப்படை விசயங்களாக உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த அசாமில் கிடைத்த விண்கல்லில் கந்தகம், சோடியம், இரும்பு போன்ற பொருட்களுக்கான சான்றுகள் காணப்படுகின்றன. இவை, பூமி தோன்றியது எப்படி என்பது பற்றிய ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.ஐ.டி. காரக்பூரின் புவிஅறிவியல் மற்றும் புவிஇயற்பியல் துறையை சேர்ந்த சுஜய் கோஷ் கூறுகிறார்.
இதனால், பூமியின் தோற்றம் பற்றிய விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு, விண்கல்லில் புதைந்துள்ள ரகசியங்கள் விடை அளிக்க கூடும் என கூறப்படுகிறது.