பர்கினா பசோவில் மர்ம நபர்கள் தாக்குதல்; 50 பேர் பலி
பர்கினா பசோவில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
அவுகாடவுகவ்,
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பசோ நாட்டில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்துவதும், மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து கொள்வதும் வழக்கம். இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கே மத்ஜோவாரி பகுதியில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் 50 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதனை கிழக்கு பகுதி கவர்னர் ஹூபர்ட் யமியோகோ செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் ராணுவ துணை நிலை வீரர்கள் 10 பேர் மற்றும் குடிமக்களில் 2 பேர் உள்பட மொத்தம் 12 பேரை அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சாஹேல் பகுதியில் வைத்து பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி கொன்றனர்.
உணவு பொருட்களை ஏற்றி கொண்டு சென்ற அந்த வாகனத்திற்கு பாதுகாவலாக உடன் சென்ற ராணுவ வாகனத்தின் மீது இலக்காக கொண்டு அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.