டாக்கா கலவரம்: ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு


டாக்கா கலவரம்: ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு
x

டாக்காவின் முகமதுபூரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கடை உரிமையாளர் அபு சயிக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக பெருமளவில் வெடித்த மாணவர் போராட்டமும், வன்முறையும் உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின.

வன்முறை சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் சென்றதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதனால் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைத்து இருக்கிறது. ஆனாலும் வங்காளதேசத்தில் வன்முறையும், கலவரமும் ஓயவில்லை. இந்த வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், ஜூலை 19 அன்று டாக்காவின் முகமதுபூர் பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் என்பவர் டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ராஜேஷ் சவுத்ரி முன் விசாரணைக்கு வர உள்ளது.

அமிர் ஹம்சா ஷாடில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜூலை 19-ம் தேதி மாலை 4:00 மணிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அபு சயீத் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவாமி லீக் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், உள்துறை மந்திரி அசதுஸ்மான் கான் கமல், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன், முன்னாள் டிபி தலைவர் ஹருன் ஓர் ரஷீத், முன்னாள் டிஎம்பி கமிஷனர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் டிஎம்பி இணை கமிஷனர் பிப்லாப் குமார் சர்க்கர் உள்ளிட்ட 6 பேரும் காரணம் என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தவிர, பல பெயர் குறிப்பிடப்படாத உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.

வழக்கு தொடர்ந்திருக்கும் அமிர் ஹம்சா ஷாடில், கொலை செய்யப்பட்ட அபு சயீத்துக்கு உறவினர் அல்ல என்று கூறப்படுகிறது. எனினும், வங்காள தேச குடிமகன் என்ற முறையில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா உபாசிலாவில் வசிக்கின்றனர் என்றும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யும் நிலையில் அவர்கள் இல்லை என்றும் அமீர் ஹம்சா ஷாடில் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.


Next Story