கொரோனா தொற்று பரவல் எதிரொலி சீன பயணிகள் வருகைக்கு தடை விதித்தது மொராக்கோ


கொரோனா தொற்று பரவல் எதிரொலி சீன பயணிகள் வருகைக்கு தடை விதித்தது மொராக்கோ
x

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அந்த நாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டுக்குள் நுழைய மொராக்கோ அரசு தடை விதித்துள்ளது.

ரபாத்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானோரை பாதித்ததோடு, லட்சக்கணக்கான உயிர்களையும் பறிந்தது.

இந்த கொடிய வைரஸ் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது. தொற்று பரவலை தடுப்பதற்காக உலக நாடுகள் பலவும் சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தன.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பின்னர் உலக நாடுகள் கட்டுப்பாடுளை தளர்த்தி சர்வதேச பயணிகளை அனுமதிக்க தொடங்கின.

ஜெட் வேகத்தில் தொற்று பரவல்

இந்த சூழலில் சீனாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது. அங்கு ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இதன் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த நிலையில் வடஆப்பிரிக்க நாடான மொராக்கோ சீன பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் நேற்று இதனை அறிவித்தது.

எல்லைக்குள் நுழைய தடை

இது குறித்து மொராக்கோ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது:-

சீனாவில் கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமை மோசமடைந்துள்ள சூழலில், மொராக்கோவில் ஒரு புதிய கொரோனா அலை மற்றும் அதன் அனைத்து விளைவுகளையும் தவிர்ப்பதற்காக சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும், மொராக்கோ எல்லைக்குள் நுழைவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நேர்மையான நட்பையோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையையோ பாதிக்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா கட்டுப்பாடு

இதனிடையே வருகிற 5-ந் தேதி முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறுவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதை ஆஸ்திரேலியா அரசு கட்டாயமாக்கியுள்ளது.

அதவாது சீனாவில் இருந்து ஆஸ்திரேலியா வரும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா 'நெகடிவ்' சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம் என ஆஸ்திரேலியா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதேபோல் கனடாவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தொடர்பான கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அங்கு இந்த கட்டுப்பாடு வருகிற 5-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story