11 நாடுகளில் குரங்கு வைரஸ் பாதிப்பு; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


11 நாடுகளில் குரங்கு வைரஸ் பாதிப்பு; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x

11 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஜெனீவா,

கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை 2 ஆண்டுகளாக மிரட்டி வருகிறது. அதற்கிடையே, கருப்பு பூஞ்சை மற்றும் பல்வேறு வண்ண பூஞ்சை நோய்களும் மக்களை பாடாய் படுத்தி விட்டன. தவிர, ஜிகா வைரஸ், நிபா வைரஸ், எபோலா வைரஸ் என உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகளும் பல பருவங்களில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், குரங்கு வைரஸ் பாதிப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. அவற்றில் ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் இந்த நோயின் பாதிப்பு தெரிய வந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இவை தவிர்த்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இதன் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதில், அமெரிக்காவில் 2021ம் ஆண்டில், நைஜீரியாவில் இருந்து வந்த 2 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் கனடா சென்று வந்த மசாசூசெட்சை சேர்ந்த அமெரிக்கருக்கும் கடந்த செவ்வாய் கிழமை பாதிப்பு உறுதியானது.

இந்த ஆண்டில் அவர் நோய் பாதித்த முதல் அமெரிக்க நபராவார். அவரை தொடர்ந்து கடந்த வியாழ கிழமை மருத்துவமனையில் உள்ள மற்றொரு நோயாளி ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இதுபற்றி ஐ.நா. தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகர சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வன விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடும் என கூறப்படுகிறது. நெருங்கிய தொடர்பில் உள்ள மனிதர்களிடையேயும் பரவி வருகிறது. உடலில் உள்ள திரவங்கள், நோய் பாதித்த தோல் பகுதியில் புண்கள் மற்றும் பாலியல் தொடர்பிலும், நோய் பாதித்தவர்களின் படுக்கை பொருட்களுடன் தொடர்பு ஏற்படுதல் ஆகியவற்றாலும் இந்த நோய் தொற்ற கூடும்.

இதன் பாதிப்பு உள்ளது என சந்தேகிப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு, தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கோடை காலத்தில் மக்கள் கூட்டம் கூடுவது, திருவிழாக்கள், விருந்துகள் என ஐரோப்பிய நாடுகளில் நோயின் பரவல் அதிகரிக்க கூடும் என ஐ.நா.வுக்கான ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் குளூஜ் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து, நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணிகளை கண்டறிவது, எப்படி பரவுகிறது, தொடர்ந்து பரவ விடாமல் அதனை எப்படி கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விசயங்களை பற்றி உலக சுகாதார அமைப்பு, பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இதற்காக அந்த நாடுகளுக்கு, வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு பணிக்கான ஆதரவு, பரிசோதனை, நோய் பரவலை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல், மருத்துவ மேலாண்மை மற்றும் சமூக மக்களோடு இணைந்து செயல்படுதல் ஆகிய ஆதரவான விசயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனாவை விட வேறுபட்ட வகையில் இந்த நோய் பரவுகிறது. இதன் பாதிப்புகள் பெரிய அம்மை நோயாளிகளுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட அறிகுறிகளை ஒத்திருக்கின்றன. இதன் கடுமை குறைவு என கூறப்படுகிறது.

ஒரு சில வாரங்களில் சிகிச்சை இன்றியே வியாதி சரியாகி விடும் என குளூஜ் கூறுகிறார். எனினும், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ள தனிநபர்களுக்கு இந்த வியாதி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

இதுவரை 80 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 50 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. கண்காணிப்பு பணிகளை விரிவுபடுத்தும்போது, இந்த பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும். இதுவரை 11 நாடுகளில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை காணப்படும். இதுதவிர மருத்துவ சிக்கலான நிலைக்கும் கொண்டு செல்ல கூடும். இதன் பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என தெரிவித்து உள்ளது.

இதுதவிர, கொரோனா பெருந்தொற்று காலத்தில் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை கழுவுதல் போன்ற பிற சுகாதார விசயங்களை கடைப்பிடிப்பதும், இந்த வியாதி பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது என குளூஜ் கூறியுள்ளார்.


Next Story