இந்தியர்களின் இமேஜை உயர்த்தியவர் மோடி.. இந்திய-அமெரிக்க சமூகத் தலைவர் பெருமிதம்


Modi changing Indians image
x

பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சியில், வெளிநாடுகளில் இந்தியர்களின் இமேஜை உயர்த்தி, உலகத் தலைவராக உருவெடுத்திருப்பதாக டாக்டர் பிந்துகுமார் கன்சுபடா தெரிவித்தார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் சேர்ந்த இதய நோய் நிபுணரும், பிரபல இந்திய-அமெரிக்க சமூகத் தலைவருமான டாக்டர் பிந்துகுமார் கன்சுபடா, இந்திய-அமெரிக்க சமூகம் தொடர்பான இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வாஷிங்டன் வந்திருந்தார். அப்போது, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சியில், இந்தியர்களின் இமேஜை இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உயர்த்தி உள்ளார். அவர் இப்போது உலகளாவிய தலைவராக கருதப்படுகிறார். இந்தியாவின் பெருமை, இந்திய பண்பாடு மற்றும் யோகா, தியானம் மற்றும் ஆயுர்வேதம் பற்றிய பண்டைய இந்திய அறிவுக்கு மோடி புத்துயிர் கொடுக்கிறார்.

எனது பார்வையில் மோடி என்ன செய்தார் என்றால், முதலில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். நான் மருத்துவ கல்லூரி படித்தபோது, மும்பையில் நான்கு மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இப்போது இந்தியாவில், 700-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி உள்ளது. 1970-ல் இந்தியாவில் ஐந்து ஐ.ஐ.டி.கள் மட்டுமே இருந்தன என நினைக்கிறேன். இப்போது 23 ஐ.ஐ.டி.கள் உள்ளன.

அடுத்து நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்திய இளைஞர்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் அப்போது நான் பார்த்ததை விட அதிகமான விமான நிலையங்கள் உள்ளன. மகிழ்ச்சி குறியீடு மேம்பட்டு வருகிறது. மக்கள் மிகவும் தன்னிறைவு பெற்றிருக்கிறார்கள். மக்கள் இந்தியர்கள் என்பதில் பெருமைப்படுவதாகவே நான் நினைக்கிறேன்.

அமெரிக்கவாழ் இந்தியர்களில் இளம் தலைமுறையினர் வணிக மேம்பாடு மற்றும் சமூக விவகாரங்களுக்காக இந்தியாவிற்கு வருகை தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், நாடு இப்போது திறமையின் மையமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் கன்சுபடா, "மும்பையில் உள்ள எனது நண்பர் உட்பட பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் இந்தியாவையும் மோடியையும் நேசிப்பதாக சொல்கிறார்கள்" என்றார்.

ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான டாக்டர் பிந்துகுமார் கன்சுபடா, வீல்ஸ் குளோபல் அறக்கட்டளை இயக்குனர் குழுவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story