தூதரகத்திற்குள் போலீஸ் நுழைந்து கைது நடவடிக்கை... ஈக்வடாருடன் தூதரக உறவை முறித்தது மெக்சிகோ


தூதரகத்திற்குள் போலீஸ் நுழைந்து கைது நடவடிக்கை... ஈக்வடாருடன் தூதரக உறவை முறித்தது மெக்சிகோ
x
தினத்தந்தி 7 April 2024 5:31 PM IST (Updated: 8 April 2024 1:37 PM IST)
t-max-icont-min-icon

ஈக்வடாரின் நடவடிக்கையை எதிர்த்து ஹேக்கில் உள்ள சர்வதேச கோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளதாக மெக்சிகோ வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

ஈக்வடார் நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜார்ஜ் கிளாஸ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான மக்களை பலிவாங்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கிளாசிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில லஞ்ச ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் ஈக்வடாரின் கிட்டோ நகரில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஜார்ஜ் கிளாஸ், தனக்கு அரசியல் தஞ்சம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். அவருக்கு தூதரகம் ஆதரவு அளித்து அங்கேயே பாதுகாப்பாக வைத்திருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மெக்சிகோ தூதரகத்தை ஈக்வடார் போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் ஒரு குழுவினர் தூதரகத்திற்குள் அதிரடியாக நுழைந்து, ஜார்ஜ் கிளாஸ் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் தூதரக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது செய்யப்பட்ட ஜார்ஜ் கியாசை கிட்டோவில் உள்ள அரசு தலைமை வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மறுநாள் அங்கிருந்து குயாகில் நகருக்கு கொண்டு சென்று, அங்குள்ள சிறையில் அடைத்தனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கையால் மெக்சிகோ, ஈக்வடார் நாடுகளிடையே பதற்றமான சூழல் உருவானது. ஈக்வடார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடர் அறிவித்தார். மேலும், ஈக்வடாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஹேக்கில் உள்ள சர்வதேச கோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளதாக மெக்சிகோ வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

இதுபற்றி ஈக்வடார் வெளியுறவுத்துறை மந்திரி கேப்ரியலா சோமர்பீல்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாட்டை விட்டு கிளாஸ் வெளியேறலாம் என்ற சந்தேகம் மற்றும் மெக்சிகோவுடனான தூதரக பேச்சுவார்த்தைக்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்தபிறகு தூதரகத்திற்குள் நுழைவதற்கு ஜனாதிபதி டேனியல் நோபோவா முடிவு செய்தார். ஜார்ஜ் கிளாசை கைது செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவருக்கு மெக்சிகோ அரசு, அரசியல் தஞ்சம் வழங்கியிருக்கிறது. குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவது சட்டப்பூர்வமானது அல்ல" என்றார்.

பொதுவாக தூதரகம் மற்றும் துணை தூதரக வளாகங்கள் வெளிநாட்டு மண்ணாகவே கருதப்படுகின்றன. மேலும் வியன்னா ஒப்பந்தத்தின்கீழ், தூதரகம் உள்ள நாட்டின் விசாரணை அதிகாரிகள், தூதரக அதிகாரியின் அனுமதி இன்றி உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. தஞ்சம் கோரும் மக்கள், உலகெங்கிலும் உள்ள தூதரகங்களில், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திற்குள் பிரிட்டன் காவல்துறையினரால் உள்ளே நுழைய முடியாததால், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே 7 ஆண்டுகள் தஞ்சமடைந்திருந்தார். தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபிறகே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈக்வடார் முன்னாள் துணை ஜனாதிபதி ஜார்ஜ் கிளாஸ் கைது நடவடிக்கையில் வியன்னா ஒப்பந்தம் மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


Next Story