மெட்டா நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு


மெட்டா நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு
x

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் 2-வது சுற்றில் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.



வாஷிங்டன்,


பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் 18 வருட வரலாற்றில் இல்லாத வகையில், நான்கு மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

எனினும், சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது என தகவல் வெளியானது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைப்படுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது.

இந்த முறை பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பணியாளர்கள் முன்னிலையில் கூறும்போது, எங்களது குழுவின் அளவை குறைப்பது பற்றி நாங்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். அதனால், 10 ஆயிரம் பேர் குழுவில் இருந்து பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறியுள்ளார்.

பொருளாதார சரிவை ஈடுகட்டும் நோக்கில் மற்றும் பரவலாக நிறுவன மறுகட்டமைப்பு மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இதனால், 2-வது முறையாக அதிக அளவிலான பணியாளர்களை நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் மிக பெரிய முதல் தொழில் நுட்ப நிறுவனம் என்ற பெயரை மெட்டா பெற உள்ளது.

இதுதவிர, 5 ஆயிரம் பேரை புதிதாக பணிக்கு அமர்த்துவதற்கான திட்ட நடவடிக்கைகளும் கைவிடப்படும் என அறிவித்து உள்ளது. அவர்கள் இன்னும் பணிக்கு அமர்த்தப்படவில்லை. இதனால், அந்த வேலைக்கு பணியாளர்கள் வரும் முன்னரே, குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் மூடப்பட உள்ளன.

பல ஆண்டுகளுக்கு தொடர கூடிய சாத்தியமுள்ள இந்த புதிய பொருளாதார நிலைக்கு நாம் தயாராக வேண்டும் என நான் நினைக்கிறேன் என்று பணியாளர்களிடம் பேசிய ஜுக்கர்பர்க் கூறினார்.

அதிகரித்து வரும் வட்டி விகிதங்களால், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் அதிக அளவில் தொடர்ந்து வருகின்றன.

கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற வால் ஸ்டிரீட் வங்கிகளில் இருந்து அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களும் இந்த பணி நீக்க நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.


Next Story