4 ஆயிரம் திறன் வாய்ந்த பணியாளர்களை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு


4 ஆயிரம் திறன் வாய்ந்த பணியாளர்களை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு
x

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் அதிக திறன் வாய்ந்த 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

வாஷிங்டன்,

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் சமீப காலங்களாக பணியாளர் குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, நிறுவனத்தில் அதிக திறன் வாய்ந்த 4 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து இன்று நீக்குவது என முடிவு செய்துள்ளது.

இதன்படி, வேலை நீக்கம் பற்றி அறிவிப்புகளை வெளியிட தயாராக இருக்கும்படி நிறுவனத்தில் உள்ள மேலாளர்களுக்கு மெமோ வழியே தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

இதனால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இதன் தாக்கம் இருக்கும். இதன்பின், புதிய மறுசீரமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் நிர்வாக நடைமுறை பற்றியும் அறிவிப்பு வெளியிடப்படும்.

எனினும், வடஅமெரிக்க பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற முடியும் நபர்களுக்கு அந்த அனுமதியை இன்று முதல் அளிக்கவும் மெட்டா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

தனது 18 வருட வரலாற்றில் இல்லாத வகையில், 6 மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பரில் 11 ஆயிரம் ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்து இருந்தது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பணியாளர்கள் முன்னிலையில் கூறும்போது, எங்களது குழுவின் அளவை குறைப்பது பற்றி நாங்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். அதனால், 10 ஆயிரம் பேர் குழுவில் இருந்து பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறினார்.

கடந்த மார்ச் மாதம் 2-வது சுற்றில் 10 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கும் முடிவை ஜுக்கர்பெர்க் வெளியிட்ட நிலையில், அதன் ஒரு பகுதியாக 4 ஆயிரம் ஊழியர்களின் இந்த பணி நீக்க நடவடிக்கை இருக்கும்.

பொருளாதார சரிவை ஈடுகட்டும் நோக்கில் மற்றும் பரவலாக நிறுவன மறுகட்டமைப்பு மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இதனால், 2-வது முறையாக அதிக அளவிலான பணியாளர்களை நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் மிக பெரிய முதல் தொழில் நுட்ப நிறுவனம் என்ற பெயரை மெட்டா பெற உள்ளது.

பல ஆண்டுகளுக்கு தொடர கூடிய சாத்தியமுள்ள இந்த புதிய பொருளாதார நிலைக்கு நாம் தயாராக வேண்டும் என நான் நினைக்கிறேன் என்று பணியாளர்களிடம் பேசும்போது ஜுக்கர்பர்க் கூறினார்.

கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற வால் ஸ்டிரீட் வங்கிகளில் இருந்து அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களும் இந்த பணி நீக்க நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.


Next Story