அப்பாவி பொதுமக்கள் படுகொலை ஏற்க முடியாதது... உக்ரைன் போரை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி


அப்பாவி பொதுமக்கள் படுகொலை ஏற்க முடியாதது... உக்ரைன் போரை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி
x

உக்ரைனுக்கு எதிராக போரில் தூதரக பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டிய அவசியம் பற்றி பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

வியன்னா,

ரஷியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷியா நாட்டுக்கான பயணம் நிறைவடைந்ததும், நேற்று மாலை ஆஸ்திரியாவுக்கு அவர் புறப்பட்டு சென்றார். அவருக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில், அதிபர் கார்ல் நெஹாமர் உடன் உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளின் கூட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

அவர் பேசும்போது, நான் இதற்கு முன்பே கூறியிருக்கிறேன். இது போருக்கான நேரம் அல்ல என்று குறிப்பிட்டு பேசினார். விவகாரங்களுக்கான ஒரு தீர்வை நாம் போர்க்களத்தில் இருந்து கண்டறிய முடியாது. ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார். தொடர்ந்து அவர், இந்தியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அளவில் தீர்வு காண வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்துகிறது. அதற்கு, எந்தவித தேவையான ஆதரவையும் வழங்க, நாங்கள் இருவரும் ஒன்றாக தயாராக இருக்கிறோம் என்றார்.

இதனால், உக்ரைன் போரில் தூதரக பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டிய அவசியம் பற்றி அவர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story