ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக முகமது கானை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார் இம்ரான் கான்


ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக முகமது கானை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார் இம்ரான் கான்
x

முகமது கான் அசாக்சாய் (image courtesy AFP)

மார்ச் 9-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்தன. அக்கட்சிகளின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக இம்ரான் கான், பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சியின் தலைவர் முகமது கான் அசாக்சாய்-ஐ அவரது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார். சன்னி இத்தேஹாட் கவுன்சில் ஆதரவு பெற்ற முகமது கான் அசாக்சாய்க்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மார்ச் 9-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆசிப் அலி சர்தாரி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். தற்போது அதிபராக இருக்கும் ஆரிப் அல்வியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், அரசியல் அசாதாரண சூழ்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story