"மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகலாம்" - இலங்கை மந்திரி லொகான் ரத்வதை நம்பிக்கை
மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகலாம் என்று இலங்கை மந்திரி லொகான் ரத்வதை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
இலங்கையை புரட்டிப்போட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்து இருக்கிறது. வேலை இழப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கிடையில் பொருளாதார நெருக்கடியில் மக்கள் போராட்டத்தின் காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று இலங்கை மந்திரி லொகான் ரத்வதை நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பனை மேம்பாட்டு சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மக்களின் எதிர்ப்பினால் சற்று விலகி இருக்கின்றாரே தவிர அவரை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் போராட்டம் நடத்தவில்லை. இவ்வாறான நிலையில் அவர் மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினையும் கிடையாது. நாடாளுமன்றத்தில் உரிய முறையில் தேர்தல் நடைபெறும் போது அவர் மீண்டும் பிரதமராக வரக்கூடிய சாத்திய கூறு காணப்படுவதாகவும் கூறினார்.